புதுக்கோட்டை: கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க திட்டமிட்டு, ஒரு செடி பறித்துக் கொடுத்தால், 3 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை, புதுக்கோட்டை இளைஞர்கள் அறிவித்துஉள்ளனர்.
கருவேல மரங்களால், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைகிறது. அந்த மரங்களை அழிக்க, அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் முயற்சி மேற்கொள்கின்றன.இந்நிலையில், புதுக்கோட்டை, கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள், கருவேல மரக் கன்றுகளை, வேரோடு பறித்து வருவோருக்கு, பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, ஒரு செடிக்கு, தலா, 3 ரூபாய் பரிசுத்தொகை வழங்குகின்றனர்.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், கருவேல மர கன்றுகளை தேடிப்பிடித்து, வேரோடு அகற்றி வந்து, எண்ணிக்கைக்கு ஏற்ப, பரிசு பெற்று செல்கின்றனர். பெறப்படும் கருவேல மரக்கன்றுகளை, உடனடியாக தீ வைத்து அழிக்கப்படுகிறது.
இது குறித்து, கொத்தமங்கலம் இளைஞர்கள் கூறியதாவது:கருவேல மரங்களாலும், தைல மரங்களாலும், ஒட்டுமொத்த நீர் ஆதாரத்தையும் இழந்து வருகிறோம். அவற்றை அழிக்க, மக்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத் தான், பரிசுத் திட்டத்தை அறிவித்தோம். கருவேல மரங்களை அழிக்க, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த இளைஞர்களின் பணியை பாராட்ட, பாஸ்கர் என்பரை, 98118 12347 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.