மும்பை: இந்திய-திபெத் எல்லை காவல் படையில், காவலர் ஒருவர், சக காவலர்கள், ஐந்து பேரை சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், காடேனர் கிராமத்தில்,இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையின், 45வது பிரிவு உள்ளது. இப்பிரிவைச் சேர்ந்த காவலர் மசுதுல் ரகுமான், திடீரென, சக காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து, இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறியதாவது:நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, துப்பாக்கிச் சூடு நடந்து உள்ளதாக தெரிகிறது. மசுதுல் ரகுமான், தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சுடப்பட்டாரா என தெரியவில்லை. காவலர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முழுமையான விசாரணையில் தான், எதற்காக மசுதுல் ரகுமான் சுட்டார், அவர் எப்படி இறந்தார் என்ற விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.