நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை தள்ளுபடி செய்ய டில்லி கவர்னர் பரிந்துரை | Dinamalar

'நிர்பயா' குற்றவாளியின் கருணை மனுவை தள்ளுபடி செய்ய டில்லி கவர்னர் பரிந்துரை

Added : டிச 04, 2019

புதுடில்லி: 'மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, டில்லி கவர்னர் பரிந்துரைத்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ம் ஆண்டில், 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் அடங்கிய கும்பலால், கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும், போலீசார் கைது செய்தனர்.

சிறுவனுக்கு, சிறார் நீதி சட்டப்படி, அதிகபட்சமாக, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம் சிங், டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்தது. இதை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில், வினய் சர்மா மட்டும், டில்லி கவர்னர் அனில் பைஜாலுக்கு, கருணை மனு அனுப்பினார். இது பற்றி, டில்லி அரசிடம், கவர்னர் கருத்து கேட்டார். வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, கவர்னருக்கு டில்லி அரசு பரிந்துரைத்தது.இதையேற்று, வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, டில்லி கவர்னர் பைஜால் பரிந்துரைத்துள்ளார்.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 'வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்து, டில்லி கவர்னர் அனுப்பிஉள்ள கடிதம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர், இதில் இறுதி முடிவு எடுப்பார்' என்றன.வினய் சர்மாவின் கருணை மனுவை, ஜனாதிபதியும் நிராகரித்தால், மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும், விரைவில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என, தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X