சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அதையடுத்து, பார்லி.,யின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை நாடுகளான, பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
இது தொடர்பான மசோதா, முந்தைய பா.ஜ., ஆட்சியில், பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு, ராஜ்யசபாவில் நிறைவேறாததால் காலாவதியானது.இந்த நிலையில், 'அசாமில் நடைமுறைபடுத்தப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்' என, மத்திய அரசு கூறி வருகிறது. அதற்கு முன், நாடு முழுவதும் அகதிகளாக உள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதன்படியே, இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, வடகிழக்கு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித் ஷா சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பல்வேறு திருத்தங்களுடன் கூடிய, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.எதிர்பார்ப்புஇது குறித்து, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:நாட்டின் உள்ள ஒவ்வொருவரின் நலன் மற்றும் நாட்டின் நலனில், மோடி அரசுக்கு அக்கறை உள்ளது. அதன்படியே, இந்த மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், இதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவர், சசி தரூர் கூறியுள்ளதாவது:மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நினைத்தவர்களால் தான், பாக்., உருவாக்கப்பட்டது.அதே நேரத்தில், மஹாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், அம்பேத்கர் போன்றோர், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை நிர்ணயிக்கக் கூடாது என்று நினைத்தனர்.அதன்படியே, நம் அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதன் அடிப்படையை குலைக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், பார்லி.,யின் நடப்பு கூட்டத் தொடரிலேயே அது தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடர், வரும், 13 வரை நடக்க உள்ளது.மற்ற முடிவுகள்மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள்: மூத்த குடிமக்கள்: மூத்த குடிமக்களுக்கு அவர்களுடைய தேவை, பாதுகாப்பை உறுதி செய்யும், பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இடஒதுக்கீடு நீட்டிப்பு : பார்லி., மற்றும் சட்டசபையில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான ஒதுக்கீடு, 2020, ஜன., 25ல் முடிகிறது. அதையடுத்து, இதை மேலும், 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பார்லி.,யில், எஸ்.சி., பிரிவினருக்கு, 84 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு, 47 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாநில சட்டசபைகளில், எஸ்.சி., பிரிவினருக்கு, 614; எஸ்.டி., பிரிவினருக்கு, 554 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன ஜம்மு - காஷ்மீர் மசோதா: ஜம்மு - காஷ்மீரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியது.
அதில், இட ஒதுக்கீடு குறித்து இடம்பெற்றுள்ளதால், ஏற்கனவே தாக்கல் செய்த பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு மசோதாவை திரும்பப் பெற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரகதி மைதானில் ஓட்டல்: டில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள, 'பிரகதி மைதான்' நிலத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில், அங்கு, ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 3.7 ஏக்கர் நிலம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட உள்ளது
சமஸ்கிருத பல்கலை: நாட்டில் உள்ள மூன்று சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைகளை, மத்தியப் பல்கலைகளாக மாற்றும் மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
தகவல் பாதுகாப்பு மசோதா: தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையிலான மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது கடன் பத்திரங்களுக்கு நிதி: 'எக்சேஞ்ச் டிரேட் பண்டு' எனப்படும் பங்கு பரிமாற்ற வர்த்தக நிதி உருவாக்கப்பட்டது. அதுபோல், 'பாரத் எக்ஸ்சேஞ்ச் டிரேட் பண்டு' எனப்படும், கடன் பத்திரங்கள் பரிமாற்ற வர்த்தக நிதி உருவாக்கவும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -