தமிழ்நாடு

வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையம்... முற்றுகை! தரமற்ற உணவு வழங்குவதாக பெற்றோர்கள் ஆவேசம்

Added : டிச 04, 2019
Advertisement
வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையம்... முற்றுகை!  தரமற்ற உணவு வழங்குவதாக பெற்றோர்கள் ஆவேசம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம், நடுநிலைப் பள்ளியில், தரமற்ற சத்துணவு வழங்குவதாகக் கூறி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தில், அரசு நிதியுதவி பெறும் தனியார் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 230 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில், தரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்குவதாக, புகார் இருந்து வந்தது.

இந்த பிரச்னை குறித்து பள்ளி நிர்வாகத்தின் மூலம், உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், சத்துணவு மையத்தை பார்வையிட்டு, தரமான உணவு வழங்க வேண்டுமென அமைப்பாளர் மற்றும் சமையலரிடம் அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 12:40 மணியளவில் மாணவ, மாணவிகள் சத்துணவில் காய்கறிகள் சேர்க்காமல் தரமின்றி இருப்பதால், மதிய உணவை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு, சத்துணவு மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வளவனுார் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, பரசுராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், 'பள்ளி சத்துணவு மையத்தில், தரமற்ற அரிசி மூலம், காய்கறிகள் ஏதுமின்றி பெயருக்கு உணவு வழங்கப்படுகிறது. சத்துணவு சமைக்கும் பணிக்கு மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் மாணவ, மாணவிகளை மொபைல் போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சத்துணவு மைய அமைப்பாளர் மிரட்டி வருகிறார்.மேலும், பள்ளி குழந்தைகளை, சத்துணவு சமையல் பொருட்களை வாங்கி வருமாறு, கடைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். பள்ளியில் இருந்து நெடுஞ்சாலையில் செல்லும் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இப்பிரச்னை குறித்து, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் சத்துணவு திட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்' என ஆவேசமாக தெரிவித்தனர்.

வெங்காயம் விலை கட்டுப்படியாகலை

சத்துணவு மைய அமைப்பாளர் மனோன்மணி கூறுகையில், 'இன்று பள்ளியில் வருகை தந்துள்ள மாணவ, மாணவிகள் 180 பேருக்கு, சத்துணவு தயாரித்து வைத்துள்ளேன். ஆனால், சாப்பாடு சரியில்லை என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு காய்கறி செலவினம் 92 பைசா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெங்காயம் விற்கும் விலையில், காய்கறி வாங்க பணம் பற்றாக்குறை ஏற்படுகிறது. சொந்த பணம், 20, 30 ரூபாய் போட்டு, காய்கறி வாங்கி சமையல் செய்து தருகிறேன்' என்றார்.

நிர்வாகம் விளக்கம்

பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சீனுவாசன் கூறுகையில், சத்துணவு மையத்தில் சரிவர சமைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. இப்பிரச்னை குறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பல முறை புகார் தெரிவித்து விட்டோம். குழந்தைகளுக்கு சுகாதாரமான சத்துணவு வழங்கக் கோரி, பெற்றோர்கள் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X