புதுடில்லி : தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவு செய்யப்படும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, தேர்தல் பத்திரம் முறை, 2018, ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, இந்த பத்திரத்தை வாங்குவோரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.இந்த தேர்தல் பத்திர முறையை எதிர்த்து, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.திருத்தம்மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தல் பத்திரம் முறையை நடைமுறைபடுத்துவதற்காக, நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர்.
அதன்படி, பண மசோதாவாக இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த பத்திரம் வாங்கு வோர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். தனி நபர்கள், இந்தியாவில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து செயல்படும் நிறுவனங்கள் உள்ளிட்டவை, இந்த பத்திரங்களை வாங்க முடியும்.இந்த திட்டத்தின்கீழ், இதுவரை, 6,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் ஒரு வகையில் லஞ்சமே. பண மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த திட்டம் உதவும்.
இந்த திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதையும் மீறி, இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆஜர்தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆஜரானார். 'இந்த மனு மீது உடனடியாக விசாரிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
'மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவு செய்யப்படும்' என, அமர்வு தெரிவித்துள்ளது.