நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கல்வித்துறை, கடலுார் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 'விஞ்ஞானியை சந்திப்போம்' என்ற நிகழ்ச்சி நெய்வேலி லிக்னைட் அரங்கத்தில் நடத்தின.
நிகழ்ச்சியில், 'விமானவியலில் இந்தியாவின் மகத்தான சாதனைகளும் மாணவர்களின் வருங்கால பங்களிப்பும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு துறை முதன்மை பொதுமேலாளர் மோகன் தலைமை தாங்கினார்.என்.எல்.சி., கல்வித் துறையின் பொது மேலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலர் தாமோதரன், துணை தலைவர் பாலகுருநாதன், கல்வித்துறை துணை பொதுமேலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தனர்.அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை தலைவர் தாமரைச்செல்வி வரவேற்றார். இந்திய அரசின் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனரும், ராணுவ விஞ்ஞானியுமான டில்லிபாபு பேசுகையில், 'தேஜஸ் இலகு ரக போர் விமானம் மற்றும் பிரமோஸ் ஏவுகணை ஆகிய கண்டுபிடிப்புகள் இந்தியாவின் மிகப்பெரும் சாதனைகளாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மாணவ, மாணவிகளின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதால், மத்திய அரசு சிறப்பு ஊதிய தொகை திட்டத்தை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுமையான சிந்தனைகளுக்கு மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும்' என்றார்.தொடர்ந்து இந்தியாவின் இலகுரக போர் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் அதன் சாதனைகள், விமானங்கள் பறப்பதற்கு உதவும் அறிவியல் வழிமுறைகளை விளக்கினார்.
நிகழ்ச்சியில் என்.எல்.சி., ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜவகர் பள்ளிகள், சேக்ரட் ஹார்ட் பள்ளி, சிதம்பரம் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி, பண்ருட்டி ஜான்டூயி பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி, காட்டுமன்னார்கோவில் கலைமகள் ஆகிய பள்ளிகளின் துளிர் இல்ல மாணவர்கள் பங்கு பெற்றனர்.மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராணி, துணை செயலர்கள் பிரசன்னகுமார், விஜயகுமார் செயற்குழு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, பூர்வ சந்திரன், மோகன்,செல்வின் ராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் பேபி மாலா நன்றி கூறினார்.