கூடலுார்:'மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்கள் சிறப்பு திறனை வளர்த்து கொண்டு சாதிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் வண்டிபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த கல்வி சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. வட்டார அலுவலர் முருகேசன் வரவேற்று பேசினார்.
விழாவுக்கு பள்ளி முதல்வர் சரஸ்வதி தலைமை வகித்தார்.கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள், சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டு சாதித்து வருகின்றனர்.அரசின் உதவி, ஊக்கத்துடன், தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இங்குள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், தங்கள் சிறப்பு திறனை வளர்த்து கொண்டு சாதிக்க வேண்டும். சமூகம் தங்களை ஒருங்கிணைத்து செல்வதையே எதிர்பார்கின்றனர்,'' என்றார்.
23 மாணவர்களுக்கு, இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, மாற்று திறனாளி மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா, வட்டார கல்வி அலுவலர் சரவணன், பிசியோதெரபி நிபுணர் புனிதா, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.