நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமின்!

Updated : டிச 06, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (29+ 210)
Advertisement
106 days, chidambaram,Supreme Court,bail,INX_Media_case,சிதம்பரம், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், சிபிஐ, அமலாக்கத்துறை, ஐ.என்.எக்ஸ்.,

புதுடில்லி : 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' ஊழலில், அமலாக்கத் துறை தொடர்ந்த பண மோசடி வழக்கில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு பற்றி பேசக் கூடாது, பேட்டி அளிக்கக் கூடாது, வெளிநாடு போகக் கூடாது' என, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 106 நாட்களுக்குப் பிறகு, காவலில் இருந்து அவர் வெளி வருகிறார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர் சிதம்பரம், 74, இதற்கான அனுமதியை அளித்தார். இதில் ஊழல் நடந்துள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறையும் வழக்கு தொடர்ந்தது.


கைது


இந்நிலையில், இந்த ஆண்டு, ஆக., 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்து, தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. ஜாமின் மனு மீதான தீர்ப்பு, நேற்று அளிக்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சாட்சியங்களை கலைத்து விடுவார் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

அவர் ஆட்சி அதிகாரத்திலோ, மத்திய அரசில் எந்தப் பொறுப்பிலோ இல்லை. அவ்வாறு இருக்கும்போது, எப்படி சாட்சியத்தை கலைக்க முடியும்? பொருளாதார குற்றம் என்பது மிகவும் தீவிரமான பிரச்னை தான். அதே நேரத்தில் ஜாமின் மனுக்களின் மீது, ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி; மறுப்பது என்பது விதிவிலக்காக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்த வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், ஒரு சாட்சி, சிதம்பரத்துடன் இணைத்து விசாரிக்க ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை கூறிஉள்ளது. அதற்கு, சிதம்பரத்தை காரணம் காட்ட முடியாது.

சிதம்பரத்துக்கு, 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு இரண்டு பிணைகள் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்படுகிறது. ஜாமினில் வெளி வந்த பிறகு, இந்த வழக்கு தொடர்பாக, பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது; ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும். சாட்சியங்களை அழிக்கவோ, திருத்தவோ முயற்சிக்கக் கூடாது; சாட்சிகளை கலைக்கக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தின் முன்அனுமதி இல்லாமல், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது.இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


உறுதிமொழி பத்திரம்


இந்த தீர்ப்பை அடுத்து, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரம் சார்பில், 2 லட்சம் ரூபாய்க்கான உறுதிமொழி பத்திரம் மற்றும் அதே தொகைக்கான இரண்டு பிணை செலுத்தப்பட்டது. அதை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் ஏற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, 106 நாட்களுக்குப் பிறகு, திஹார் சிறையில் இருந்து, சிதம்பரம் நேற்று வெளியே வந்தார். அவரை, அவருடைய மகன் கார்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஏராளமான காங்., தொண்டர்களும் அங்கு குழுமியிருந்தனர்.


'பழிவாங்கல் நடவடிக்கை'


சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டது குறித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சிதம்பரத்தை சிறையில் அடைத்தது பழிவாங்கும் நடவடிக்கையே. தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கின் விசாரணை நேர்மையாக நடந்து, தான் குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிதம்பரத்தின் வழக்கறிஞரும், காங்., மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி கூறியுள்ளதாவது: தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த வழக்கில் அவருக்கு முன்பே ஜாமின் அளித்திருக்க வேண்டும். இறுதியில் நீதி வென்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


பார்லிமென்டில் பங்கேற்பார்


சிதம்பரத்தின் மனைவி, மூத்த வழக்கறிஞர், நளினி கூறியதாவது: ஜாமின் வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், உடல்நிலை மேம்பட்டதும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார். இவ்வாறு, அவர் கூறினார். பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது; வரும், 13ம் தேதி இது நடைபெற உள்ளது. சிதம்பரம் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.


சமூக வலைதளத்தில் கிண்டல்


பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கும் தீர்ப்பை கேட்டதும், காங்., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியது, கட்சி ஊழலைக் கொண்டாடுகிறது என்பதற்கான உதாரணம். காங்., கட்சியில் ஜாமினில் உள்ள சோனியா, ராகுல், ராபர்ட் வாத்ரா, மோதிலால் வோரா, புபேந்திர சிங் ஹூடா, சசி தரூர் போன்றோர் பட்டியலில், சிதம்பரமும் இணைந்துள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வழக்கு கடந்த வந்த பாதை


ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், அமலாக்கத் துறை தொடர்ந்த பண மோசடி வழக்கில் இதுவரை நடந்தது:
மே, 15, 2017 - கடந்த, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பிப்., 16, 2018 - இந்த ஊழல் வழக்கில் நடந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி, சிதம்பரத்துக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.

மே, 30 - சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல்.

ஜூலை, 23 - அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்.

ஜூலை, 25 - இரண்டு வழக்கிலும், அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜன., 25, 2019 - இரண்டு வழக்கிலும் முன் ஜாமின் அளிப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைப்பு.

ஆக., 20 - முன்ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தீர்ப்பை செயல்படுத்த, மூன்று நாள் அவகாசம் கேட்ட சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிப்பு.

ஆக., 21 - சி.பி.ஐ., வழக்கில் சிதம்பரம் கைது.

செப்., 5 - அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமினை மறுக்கும் டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சிதம்பரத்தின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்., 5 - திஹார் சிறையில் உள்ள சிதம்பரத்தை விசாரிக்கவும், தேவைப்பட்டால் கைது செய்யவும், அமலாக்கத் துறைக்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி.

அக்., 16 - திஹார் சிறையில் சிதம்பரத்தை விசாரித்த அமலாக்கத் துறை, அவரை கைது செய்தது.

அக்., 18 - ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் மற்றும் 13 பேர் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல்.

அக்., 22 - சி.பி.ஐ., வழக்கில், சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

அக்., 30 - அமலாக்கத் துறை வழக்கில், உடல்நிலை காரணமாக, இடைக்கால ஜாமின் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்.

நவ., 15 - அமலாக்கத் துறை வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு.

நவ., 18 - உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்.

நவ., 21 - சிதம்பரத்தை, திஹார் சிறையில், நவ., 22, 23ல் விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி.

நவ., 28 - சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

டிச., 4 - சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

Advertisement




வாசகர் கருத்து (29+ 210)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-டிச-201916:11:06 IST Report Abuse
Endrum Indian அநீதிமன்றம் சிதம்பரத்தின் உண்மையான மதிப்பை எள்ளி நகையாடுவது போல இருக்கின்றது இந்த பிசாத்து ரூ 2 லட்சம் ஜாமீனுக்கு பிணைத்தொகை என்று அது 2 லட்சம் கோடி என்று இருந்திருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
05-டிச-201922:59:39 IST Report Abuse
Rajasஅரசு தரப்பில் கோர்ட்டில் சொல்லப்பட்ட லஞ்ச தொகையே 9.96 லட்ச ரூபாய் தான். இதற்க்கு தான் இவ்வளவு இழு இழுத்தது அரசு தரப்பு...
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
05-டிச-201915:43:13 IST Report Abuse
Rajas ////பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா, சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கும் தீர்ப்பை கேட்டதும், காங்., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியது, கட்சி ஊழலைக் கொண்டாடுகிறது என்பதற்கான உதாரணம்.//// முகுல் ராய் (சாரதா சீட் பண்டு ஊழல்) அணில் சர்மா(தொலைபேசி ஊழல் என்று சொல்லப்பட்ட சுக்ராமின் மகன்) , , ஹிமந்தா பிஸ்வா சர்மா (பிஜேபியால் கவுகாத்தி தண்ணீர் ஊழல்வாதி என்று சொல்லப்பட்டவர் ) அருணாச்சல முதல்வர் பேம காண்டு (ஊழல்வாதி என்று பிஜேபியால் சொல்லப்பட்டவர்) நாராயண் ரானே (ஊழல்வாதி என்று பிஜேபியால் சொல்லப்பட்டவர்) . அவ்வளவு ஏன் நம் நயினார் நாகேந்திரன். இவர்கள் எல்லாம் இப்போது பிஜேபியில். இவர்களை வைத்து கொண்டு ஊழலை கொண்டாடுவது யார்
Rate this:
Share this comment
Cancel
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
05-டிச-201912:24:13 IST Report Abuse
தோலுரிப்பவன் எல்லாம் ஓடமும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X