கண்டன தீர்மான விசாரணை டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பு| Dinamalar

கண்டன தீர்மான விசாரணை டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பு

Added : டிச 05, 2019
கண்டன தீர்மான விசாரணை டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பு

லண்டன்: தேர்தலில் முறைகேடு செய்தது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக, அமெரிக்க பார்லியில் கண்டன தீர்மானத்தின் மீது விசாரணை நடக்க உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடக்கும், 'நேட்டோ' நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜோ பிடன் மீது பொய் வழக்கு தொடருவதற்கு, ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபரின் உதவியை டிரம்ப் நாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, பார்லி.,யில் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதில், டிரம்ப் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், 'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, லண்டனுக்கு சென்றுள்ளார்

டிரம்ப். அங்கு, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல், இத்தாலி பிரதமர் கியூசிபே காண்டே உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார். 'இந்த கண்டன தீர்மானம் எங்கு போய்விடப் போகிறது. விசாரணைக்கு ஆஜராகி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X