கம்பம், :முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விடுவிக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை முன்வர வேண்டும் என கம்பம் விவசாயிகள் வலியுறுத்தி உள் ளனர்.கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் ஓ,.ஆர். நாராயணன், செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் சங்கநிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் அரசிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளில் ஒரு போகம் செய்யும் அவலத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். இதற்கு பொதுப்பணித்துறையினரின் கவனமின்மையும், நீர் மேலாண்மையில் நிபுணத்துவம் இல்லாததும் தான் காரணமாகும். இந்தாண்டும் பருவமழை தாமதத்தால் நெல் சாகுபடியும் தாமதமாக துவங்கியது. பின்னர் நல்ல மழை பெய்து,பெரியாறு அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது. தற்போது வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரு நாளில் அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டிவிடும். அதன்பின் வீணாக தண்ணீர் கடலில் கலக்கும். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரத்து 600 கனஅடி எடுப்பதை குறைத்தால், அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்ட உதவும். தற்போது நீர்மட்டம் 128.90 அடியாக உள்ளது. வைகை அணைக்கு தேவையில்லாத போது, பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை விடுவிப்பது ஏன். எனவே எடுக்கும் தண்ணீரின் அளவை குறைத்து, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தினால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மேலும் ஒரு போகம் நெல்சாகுபடி செய்ய உதவியாக இருக்கும். அரசு இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.