தன்னார்வ தொண்டர்களை உருவாக்குவோம்

Added : டிச 05, 2019
Advertisement
தன்னார்வ தொண்டர்களை உருவாக்குவோம்

ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய வாழ்க்கை முறையை சமூகம் கட்டமைத்து இருக்கிறது. அப்படித்தான் உலக வாழ்வியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் தனக்காக வாழ்பவர்களும் பிறருக்காக பொதுநலத் தொண்டு செய்து வாழ்பவர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுய நலத்தை மறந்து விடுகிறோம். பொதுத் தொண்டு செய்யும் ஆளுமைகளை அடையாளம் காட்டுகிறோம். இதனை வரலாறும் தன்னுள் தனதாக்கிக் கொள்கிறது. நாட்டிற்காகத் தொண்டு செய்தவர்களும் உண்டு. மக்களுக்காகத் தொண்டு செய்வதவர்களும் உண்டு.

இறைவனுக்குத் தொண்டு செய்யும் இதயம் படைத்தவர்களும் இவ்வுலகில் உண்டு. இப்படி வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் நல்ல மனமும் பொதுநலத் தொண்டுள்ளமும் படைத்திட்ட மனிதர்கள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுயநலம் தான் மிஞ்சும்.

பொதுநல வாசல்கள் அடைக்கப்பட்டுவிட்டால் பொழுது விடியுமே தவிர போக்கிடம் கிடைக்காது. எனவே தன்நலம் கருதாத தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவதும் அவர்களை அங்கீகரித்து அடையாளப்படுத்துவதும் ஒவ்வொருவரின் கடமை எனக்கொள்ள வேண்டும்.

தொண்டர்கள்
தொண்டு என்பது எல்லோராலும் செய்துவிடக்கூடிய செயல் இல்லை. அதற்கென்று மனமும், மனிதநேயமும் வேண்டும். தொண்டு என்பது தொழில் அல்ல. தொழிலுக்கு லாப நஷ்ட கணக்குகள் உண்டு. தொண்டிற்கு என்றைக்கும் தோல்வி இல்லை என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும், மனித நேயத்துடன் மனிதர்களை அனுக வேண்டும். பொதுநலத் தொண்டிற்கு பொன்னான நேரத்தை ஒதுக்க வேண்டும். இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இரக்கமும், ஈகையும் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். இது போன்ற பண்பு நலன்களை அடிப்படையாக் கொண்டவர்தான் தன்னார்வத் தொண்டர்களாக தன்னை அடையாளப்படுத்த முடியும்.

தியாக மனப்பான்மை
மெழுகுவர்த்தி எப்படி தன்னைத்தானே உருக்கிக் கொண்டு உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கிறதோ அதே போல் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று ஏதும் செய்து கொள்ளாமல் உலக நலத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். பொதுப் பாதை தொடங்கி பொது நல வழக்கு வரைக்கும் இவர்களின் பயணம் தொடர்கிறது.

தான் தனது தனக்கு என்ற தன்நிலை மறந்து பொதுநிலை நோக்கோடு வாழ்ந்து வருபவர்கள் இவர்களின் தியாக வாழ்க்கை வரலாற்றின் பக்கங்களில் பதிவிடப்படுகிறது. அதனால் நாட்டிற்குத் தொண்டு செய்த விவேகானந்தரும், சமூகத்திற்கச் சேவை செய்த அன்னைத் தெரசாவும், இறைவனுக்குத் தொண்டு செய்த அடியவர்களும் இன்றளவும் பேசப்படுகின்றனர். இவர்களின் தியாக வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. தன்னிடம் இருக்கும் பொன்னையும், பொருளையும் பொது வாழ்க்கைக்கு செலவு செய்கின்றனர். பொன்னான நேரத்தையும் தியாகம் செய்கின்றனர். ஜாதிகளையும், மதங்களையும் கடந்து சமத்துவ வாழ்விற்கு வழி காட்டுபவர்கள். இல்லறமும், துறவறமும் இவர்களோடு இணைந்தே பயணிக்கிறது. இன்பத்தையும் துன்பத்தையும் அனுதினமும் சுமந்து செல்பவர்கள்.

மனிதநேயம்
மனிதனுக்கு மனிதன் பேசும் நேரம் குறைந்து விட்டது. பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் கூடத் தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தாயை தாக்கி வீசுகிறோம். தகப்பனை தள்ளிவைத்து சுகம் காணுகிறோம். பெற்ற பிள்ளையை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனித நேயத்துடன் தொண்டு செய்யும் தன்னார்வத் தொண்டர்கள்தான் இவர்களுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுக்கும் அமுதசுரபிகள்.

முதியோர் இல்லங்களையும், ஆதரவற்றோர் இல்லங்களையும் பராமரித்துத்திடவும் இங்கு தங்கியிருப்போரை போற்றிப் பாதுகாத்திடவும், மனித நேயமிக்க தன்னார்வத் தொண்டர்களால் தான் முடியும்.
மழை, புயல், வெள்ளம், தீ போன்ற இயற்கை சீற்றங்களினால் சிதைவுண்டு போன வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிறைவேற்றிக் கொடுக்கும் உயர்ந்த மனம் படைத்த உதவும் உள்ளங்கள் அவர்கள்.

பொறுப்பும், பொறுமையும்
அன்று வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கிய சென்னை நகரவாசிகளுக்கு தெரியும் தன்நலம் கருதாத தன்னார்வத் தொண்டர்களின் பொறுப்பும், பொறுமையும் எத்தகைய வலிமையானது என்று. தன் உயிரை பணயம் வைத்து பிறர் உயிரை காப்பாற்றும் பிதாமகன்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தவப் புதல்வர்களை தரணி எங்கும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கும். கழுத்தளவு தண்ணீராக இருந்தாலும், கரண்ட் இல்லாத இருட்டு உலகமாக இருந்தாலும் இவர்களின் உதவும் கரங்கள் நீண்டு கொண்டே தான் இருக்கும்.
தன்னார்வத் தொண்டர்களின் பொதுநலப்பணி சமூகத்தின் பல்வேறுத் தளங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது. மரக்கன்றுகள் நடுதல், அதனை பாதுகாத்தல், திருவிழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல், போக்குவரத்து நெரிசலான இடங்களில் உதவுதல் என அவர்கள் பணி தொடர்கிறது.

சமூகத்தில் நிகழும் அவலங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்கின்றனர். முடியாத நிலையில் நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டுகின்றனர்.பல்வேறு சமூக பிரச்னைகள் மீது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இருப்பவரிடம் பெற்று இல்லாதோருக்கு உதவுகின்றனர். அன்னச்சத்திரங்களையும், நீர்மோர் பந்தலையும் அமைத்து மக்கள் பசி தீர்க்கின்றனர்.

கல்வி நிலையங்கள்
கல்வி நிலையங்கள் கல்வியை கற்றுக் கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. சமூகத்தொண்டாற்றும் தன்னார்வலர்களையும் அவர்கள் உருவாக்க வேண்டும். இந்தச் சமூகத்தின் மீதான அக்கறையையும், பொதுநலச் சிந்தனையையும் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர்படை, சாரண சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகளை கல்வி நிலையங்களில் அரசே ஏற்படுத்தி உள்ளது.
அதில் மாணவர்களை உறுப்பினராக்க வேண்டும். தான் சார்ந்த இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் சிறந்த தன்னார்வத் தொண்டர்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பது கண்கூடு.

வாழ்வது ஒருமுறை
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பார்கள். தலைமுறைக்கும் நாம் வாழ்த்தப்பட வேண்டும், பேசப்பட வேண்டும் என்றால் சுயநலம் மறந்து பொதுநலத்தோடு வாழ்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழுங்கள் என்றார் விவேகானந்தர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார் ராமகிருஷ்ணர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்'

என்றார் வள்ளுவர். இவர்கள் கண்ட வாழ்வியல் நெறி சுயநலம் இல்லாத பொதுநலம். அதனால்தான் இன்றளவும் இவர்கள் பேசப்படுகிறார்கள். நாளை நாமும் பேசப்பட வேண்டும் என்றால் தன்னலம் கருதாத தன்னார்வத் தொண்டர்களாக வாழ்வோம். தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவோம்!
-மு.ஜெயமணி, உதவிப்பேராசிரியர், ராமசாமி தமிழ்க்கல்லூரிகாரைக்குடி. 84899 85231

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X