உடுமலை:மண்டல பாசனத்துக்கு பிரதானமாக சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்க உள்ள நிலையில், விலை திடீரென சரிந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள, கோழி, மாட்டுத்தீவனம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா மாநிலங்களிலிருந்தும், தமிழக தொழிற்சாலைக்கு தேவையான மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு வட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் தமிழகத்தில் படைப்புழு தாக்குதல், சாகுபடியை முடக்கியது.
தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவால், மக்காச்சோளத்திற்கான விலை, குவிண்டால், 2,800 வரை இருந்தது.விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தற்போது, 60 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு, உற்பத்தியாகும் மக்காச்சோளத்தை, உடுமலை, பல்லடம் பகுதியிலுள்ள, கோழித் தீவனம், மாட்டுத்தீவன உற்பத்தி தொழிற்சாலைகள் கொள்முதல் செய்து வருகின்றன.கடந்த, ஏப்., முதல் ஜூலை வரை, ஒரு குவிண்டால் மக்காச்சோளம், 2,700 வரை விற்றது.ஆக.,ல், பீகார் மாநில வரத்து காரணமாக, 2,300 வரையும், தற்போது, கர்நாடக மாநில வரத்து காரணமாக, 1,800 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
பயிரிட்ட போது, 2,800 ஆக இருந்த விலை, அறுவடையின் போது, ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது
நடப்பு ஆண்டும், மழை, படைப்புழு தாக்குதல், காட்டுப்பன்றியால் சேதம் என, ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், செலவாகியுள்ளது. பெரிய நிறுவனங்கள், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக, அறுவடை துவங்குவதற்கு முன், விலை சரிந்துள்ளது. தற்போதும், ஏக்கருக்கு, 20 முதல் 30 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. விலை குறைவை கட்டுப்படுத்த நிறுவனங்களுடன் மாவட்ட நிர்வாகம், வேளாண் வணிகத்துறை பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு நேரடியாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமும், கொள்முதல் செய்தால், அரசுக்கு கூடுதல் வருவாயும், விவசாயிகளுக்கும் உரிய விலையும் கிடைக்கும். இவ்வாறு, கூறினர்.
இருப்பு வைக்கலாம்!
விற்பனைக்கூட அதிகாரிகள் கூறுகையில்,' மக்காச்சோளம் விலை சரிந்ததும், கர்நாடகா விவசாயிகள் விற்பனையை நிறுத்தினர். அதனால், குவிண்டால், 1,800 ரூபாய்க்கு இருந்தது, மூன்றே நாளில், 300 ரூபாய் உயர்ந்து, 2,100 ரூபாய்க்கு விற்கிறது. இங்கும், அறுவடை காலத்தில், விலை கிடைக்கும் வரை, விற்பனை செய்யாமல், ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்கலாம். தேவைக்கும், உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளதால், நடப்பு பருவத்தில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE