புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி தலைமை தனியார் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்க தலைவர் கிருஷ்ணன் அளித்த பேட்டி:பிரதான சாலைகளில் சுற்றி திரிகின்ற மாடுகளை பிடிக்காமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒதுக்குப்புறமான இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் மேய்கின்ற மாடுகளை தேடி தேடி நகராட்சி ஊழியர்கள் பிடிக்கின்றனர்.
ஏற்கனவே, புதுச்சேரியில் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. தீவன விலை உயர்வு, பசும்புற்கள், வைக்கோல் பற்றாக்குறை, மருத்துவ, பராமரிப்பு செலவுகள், நகரப் பகுதியில் இடப்பற்றாக்குறை போன்றவற்றால் பால் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.இதுபோன்ற சூழ்நிலையில், ஒதுக்குப்புறமான பகுதிகளில் இருக்கும் மாடுகளையும் தேடிச் சென்று பிடிப்பதால் பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும், பிடிக்கப்படும் மாடுகளை விடுவிப்பதற்கு அபராதமாக மாடு ஒன்றுக்கு 4,300 ரூபாய் வசூலிக்கின்றனர்.
இது, பால் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.தீபாவளிக்கு முன், ரெயின்போ நகர் ஏழாவது தெரு விரிவாக்கத்தில் பிடித்து செல்லப்பட்ட சினை மாடுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அபராத கட்டணத்தை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10ம் தேதியன்று, புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE