வில்லியனுார் : வில்லியனுார்- கூடப்பாக்கம் சாலையில் மூர்த்தி நகர் அருகே உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் இருந்து மூலக்குளம், பிச்சைவீரன்பேட், பெரம்பை வழியாக வில்லியனுாருக்கும், வில்லியனுாரில் இருந்து புதுச்சேரிக்கு கூடப்பாக்கம் ரயில்வே கேட் வழியாக, பொறையூர், ஊசுடேரி, குருமாம்பேட், மூலகுளம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் சில தினங்களாக பெய்த கன மழையால், கூடப்பாக்கம் சாலையில் மூர்த்தி நகர் அருகே இரு இடங்களில் மெகா பள்ளம் அருகருகே ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் அவ்வழியாக செல்லும் இருசக்க வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.மேலும் அவ்வப்போது பெய்துவரும் மழையால் பள்ளத்தில் நீர் தேங்கி நிற்கும்போது ஆழம் தெரியாமல் வெளியூரில் இருந்து வரும் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து பலத்த சேதங்களுடன் சாலையை கடந்து செல்கின்றன.மேலும் கூடப்பாக்கம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே உள்ள வேகத்தடை பகுதியில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை கடக்க முடியாமல் வாகனங்கள் தள்ளாடியபடி செல்ல வேண்டியுள்ளதால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் செல்வதால் இப்பகுதியை கடக்க வெகு நேரமாகிறது.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, கூடப்பாக்கம் சாலையில் மூர்த்தி நகர் அருகே உள்ள மெகா பள்ளம் மற்றும் ரயில்வே தண்டவாள வேகத்தடை பகுதியில் உள்ள பள்ளங்களை சரி செய்திட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.