இந்தியா

மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... அவசியம்!

Added : டிச 05, 2019
Advertisement
மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... அவசியம்!

புதுச்சேரி, பிரெஞ்சுக்காரர்களால் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகரமாகும். நேரான வீதிகள், மழை நீர் வடிவதற்கு முறையான வடிகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மக்கள் தொகை வளர்ச்சி, புதிய புதிய குடியிருப்பு பகுதிகள் உருவானது. வடிகால்கள் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடற்கரையொட்டிய ஒயிட் டவுன் பகுதிக்கு மட்டுமே, வடிகால்கள் பயனுள்ளதாக உள்ளது.

நகரின் பிற பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தாததால், 26 முக்கிய வடிகால்கள் இருந்தும் ஒரு நாள் மழையை கூட சமாளிக்க முடியாமல், நகர வீதிகள் வெள்ளக்காடாகவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகள் குளமாகவும் மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றப்படுகிறது. இது, ஆண்டு தோறும் பருவ மழை காலங்களில் நடப்பது வாடிக்கை.நகரில் தற்போதுள்ள வடிகால்கள், 5 செ.மீ., மழையை மட்டுமே தாங்கும் நிலையில், வடிகால் வசதியை மேம்படுத்த முறையான திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மட்டுமே, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண முடியும் என்ற நிலை உள்ளது.


ஒருங்கிணைந்த திட்டம்

புதுச்சேரியில் கடந்த 2015ம் ஆண்டு பருவ மழை அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்ததால், புதுச்சேரி முழுவதும் வெள்ளக்கடானது. இந்திரா சதுக்கம், பூமியான்பேட்டை, வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகி, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல நாட்கள் வடியாததால், மக்கள் கடும் அவதியுற்றனர்.இதை கருத்தில் கொண்டு, அப்போதைய ஆட்சியில், வடிகால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி நகரில் வடிகால்களை ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல், புதிய வடிகால்கள் அமைப்பது தொடர்பாக விரிவான திட்டம் தயாரிக்க முடிவு செய்து, சென்னையை சேர்ந்த தனியார் கன்சல்டன்சியிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, சென்னையை சேர்ந்த தனியார் கன்சல்டன்சி பொறியியல் வல்லுனர் குழுவினர், புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, நகரம் முழுவதும் ஆய்வு செய்து, நகரப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை ஒருங்கிணைத்தல் மற்றும் நகரப் பகுதியில் மழைநீர் வடிய புதிதாக வாய்க்கால் அமைக்க வசதி இல்லாததால், நகரை ஒட்டி புதிதாக வாய்க்கால் அமைப்பது தொடர்பாக விரிவான திட்டம் தயாரித்து வழங்கினர்.ஹட்கோ மூலம் கடன் பெற்று, புதிய வடிகால் வாய்க்கால்களை அமைக்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம், மாநில நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

மழைக்கு முன்பாக இந்த ஆண்டு, நகரில் உள்ள முக்கிய வடிகால்கள் பொதுப் பணித் துறை நீர்பாசன பிரிவு சார்பில் துார்வாரப்பட்டது.இருந்தபோதும், கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி 4 நாட்களில் 30 செ.மீ., மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதியடைந்தனர். நகரம் மீண்டும் வெள்ளக்காடாவது தொடர்கிறது.எனவே, ஏற்கனவே, ஆய்வு நடத்தப்பட்டு கிடப்பில் உள்ள ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, புதுச்சேரியில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்..

இதுதொடர்பாக அதிகாிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வடிகால் திட்டம், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கூட இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.


பெரிய வாய்க்காலை அரசு கவனிக்குமா?

புதுச்சேரி முழுவதும் பெய்யும் மழை நீர், வெளியேறும் கழிவு நீர் அனைத்து சிறிய வாய்க்கால், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் வழியாக மட்டுமே சென்று கடலில் கலக்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாய்க்கால்கள் துார்ந்து போகாமல் நல்ல முறையில் பராமரித்து, தண்ணீர் தேங்காமல் விரைவாக வடிவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொண்டால், நகரத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X