உடுமலை:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை வாய்க்கால் மூலம், ஏழு ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசனத்துக்கு, மக்காச்சோளம், பருத்தி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்று துவங்கிய போதே வடகிழக்கு பருவமழை பொழிவும், தீவிரமடைந்தது. விளைநிலங்களில், அதிக ஈரம் காரணமாக, நீண்ட கால பயிரான தென்னைக்கு மட்டும், பாசன நீரை விவசாயிகள் பயன்படுத்தினர். தற்போது, மூன்றாம் சுற்றுக்கு, கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர் மழையால், பாசன நீரை வீணடிக்காமல், குளங்களில், தேக்கி வைக்க, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி கொங்கல்நகரம் கிராம குளத்துக்கு தண்ணீர் சென்று வருகிறது.பிற குளங்களிலும் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, அப்பகுதி விவசாயிகள் பணிகளை துவக்கியுள்ளனர்.