தாண்டிக்குடி, தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் வனவிலங்கு தாக்குதலால் மனித உயிர்கள் காவு வாங்குவது தொடர்வதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.மேற்கு மலைத் தொடரில் கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய மற்றும் வாழ்விடங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக பெருகிய காட்டுமாடு, மான், காட்டுப்பன்றி இவற்றின் தாக்குதலால் விவசாயம் வெகுவாக பாதித்துள்ளது.பயிர்களை காக்க செல்லும் விவசாயிகளுக்கும், வனவிலங்குகளுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு உயிர்பலியும் நிகழ்ந்துவிடுகிறது. சில ஆண்டுகளாக காட்டுயானை வரவு மேலும் பாதிப்பை அதிகரித்து, மலைவாழை விவசாயத்தை துவம்சம் செய்து விட்டது. காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தியும் பலனில்லை. வனத்துறைக்கு போக்கு காட்டும் யானைகள் நாளுக்கு நாள் தங்கள் எல்லையை விரிவுப்படுத்தி கொண்டன. ஒன்றிரண்டு எண்ணிக்கையில் வந்தநிலை மாறி, 20 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிடுகின்றன. இந்த யானைகளுக்கு இதுவரை பள்ளத்துக்கால்வாய் தபால்காரர் மாதி, தாண்டிக்குடியில் மூக்கம்மாள், கவுச்சிகொம்பில் மாரியம்மாள், கடந்த மாதம் கானல்காட்டில் காட்டுமாடு தாக்கி ராஜாக்கிளி, கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் கோபாலகிருஷ்ணன் என மனித உயிர்கள் காவு வாங்கப்பட்டன. உயிரிழப்புக்கு இழப்பீடுதான் தீர்வு என வனத்துறை கருதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரே வனத்துறை அமைச்சராக உள்ளார். இந்தநேரத்திலாவது இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.