காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விப்பேடு பாலாற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர்வரத்து கால்வாய் வழியாக செவிலிமேடு ஏரிக்கு வரும்.ஆறு ஆண்டுகளுக்கு முன், பாலாற்றில் அளவுக்கு மீறி மணல் எடுக்கப்பட்டதால், பாலாறு பள்ளமாகி, கால்வாய் மேடானது. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே, இந்த கால்வாயில் தண்ணீர் ஓடி, செவிலிமேடு ஏரியை அடையும்.
இந்நிலையில், சில நாட்களாக, செவிலிமேடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஏரியில் ஓரளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால், கால்வாயை முறையாக பராமரிக்காததால், தேங்கிய நீரும், உடைப்பு வழியாக வீணாகி வருகிறது.இது குறித்து, செவிலிமேடு விவசாயிகள் கூறியதாவது:இந்த ஏரியின் பாசன பரப்புகள் பெரும்பாலும், குடியிருப்புகளாக மாறிவிட்டன. எனினும், ஏரி அருகில், 120 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரி நிரம்பினால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லாததால், செவிலிமேடு நீர்வரத்து கால்வாயை சீரமைத்தால், ஏரியில் தண்ணீர் தேங்கும். இதை வைத்து, இருபோகம் விவசாயம் செய்ய முடியும்.எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள், கால்வாயை சீரமைக்க வேண்டும்; இல்லையென்றால், இருக்கும் நீரும் வீணாக வெளியேறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.