பொள்ளாச்சி:விலை சரிவால், வேதனையில் இருந்த தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தியாளர்கள், சமீப நாட்களாக விலை அதிகரித்து வருவதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அதேபோல, தேங்காய், கொப்பரை உற்பத்தியும், விற்பனையும் உயர்ந்துள்ளது.கடந்த சில மாதங்களாக, தேங்காய் உற்பத்தி குறைந்திருந்தது. இதன் காரணமாக, தேங்காய் பறிப்பு சரிந்து, கொப்பரை உற்பத்தி களங்கள் மூடப்பட்டன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை, 90 ரூபாய்க்கு விற்ற சாதாரண கொப்பரை நேற்று, 98 ரூபாய்க்கும், ஸ்பெஷல் ரகம், 95ல் இருந்து, 99 ரூபாயாக உயர்ந்தது.பச்சை தேங்காய் டன்னுக்கு, 30 ஆயிரம் ரூபாய், கருப்பு தேங்காய், 31 ஆயிரம் ரூபாயாகவும் விற்றது. தவிர, ஆயில், 2,050 ரூபாய், தேங்காய் பவுடர் கிலோ, 135 ரூபாய்க்கும் விற்றது.
தேங்காய் உற்பத்தியாளர்கள் கூறுகையில், '2020, மே வரை, தேங்காய் விலை குறைய வாய்ப்பில்லை. தேங்காய் உற்பத்தி இல்லாததே, இதற்கு காரணமாகும். தமிழகத்தில், வரும் மே, ஜூன், ஜூலை மாதங்கள் தேங்காய் சீசன் காலமாகும். முன்னதாக, கேரளாவில் தேங்காய் சீசன் துவங்கினாலும், விற்பனைக்கு போகாது. உள்ளூர் பயன்பாட்டுக்கு மட்டுமே தேவையான தாக இருக்கும்.தற்போதைய நிலையில், கொப்பரை களங்கள் மூடப்பட்டுள்ளதோடு, குடோன்களில் இருப்பும் இல்லாத நிலை நீடிக்கிறது. ஏற்கனவே, தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் கொப்பரை விலை கிலோ, 100 ரூபாயை தாண்டும்,' என்றனர்.