மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியில், 22.6 அடி கொள்ளளவில் நீர் இருப்பதால், இந்தாண்டு சதம் அடிக்குமா என, விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 23.3 அடி கொள்ளளவு, 2,420 ஏக்கர் பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதியை உடையது.இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், மதுராந்தகத்தைச் சுற்றி உள்ள, 15 கிராமங்களின் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள், இரு போகம் பாசனம் பெறும்.சில ஆண்டுகளாக, மதுராந்தகம் ஏரி நிரம்பாத நிலையில், சமீபத்தில் பெய்த கன மழையால், மதுராந்தகம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வருகிறது.
இது குறித்து, மதுராந்தகம் ஏரி பாசன பிரிவு, உதவி செயற்பொறியாளர் குமார் கூறியதாவது:நேற்று மாலை நிலவரப்படி, 22.6 அடி கொள்ளளவில் நீர் உள்ளது. ஏரிக்கு, 100 கன அடி வீதம் நீர் வருவதால், ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.மதுராந்தகம் ஏரி நீர் பாசன விவசாயிகள் கூறியதாவது:வட கிழக்கு பருவ மழை முடியவுள்ள நிலையில், ஏரி நிரம்புமா என, எதிர்பார்த்திருந்தோம்.இந்நிலையில், இரு நாட்கள் பெய்த கன மழையால், ஏரி நிரம்பி வருகிறது. அடுத்தடுத்த மழைக்கு, ஏரி நிரம்பி விடும் என, எண்ணுகிறோம்.அடுத்த இரண்டு போகத்திற்கு விவசாயம் செய்ய, ஏரியில் தண்ணீர் உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.