பொள்ளாச்சி:தமிழகத்தில் வரும், 27, 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், அரசு சார்பில் எவ்வித புதுத்திட்டங்கள் அறிவிப்பதற்கும், துவங்கி வைப்பதற்கும் தடை எழுந்துள்ளது. இதற்கு முன் துவங்கப்பட்ட திட்டப்பணிகள் மட்டும் அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர அனுமதி உள்ளது.
மேலும், அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களை மறைக்கும் பணியில் அந்தந்த உள்ளாட்சிகளின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகளின் சின்னங்களும் மறைக்கப்பட்டு, கொடிக்கம்பங்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள, 52 பக்கங்களை கொண்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளுக்கான தொகுப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விதிகளை பின்பற்ற அலுவலர்கள், பணியாளர்கள், அரசியல் கட்சியினருக்கும் வலியுறுத்தப் பட்டு உள்ளது. விதிமீறல்கள் தென்பட்டால், ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்,' என்றனர்.