பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து முக்கிய ஆன்மிக தலங்களுக்கு திருக்கார்த்திகை ஜோதியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள், இந்துக்களால் புனித நாளாக கருத்தப்படுகிறது. இந்நாளில், கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி, திருக்கார்த்திகை ஜோதியாக கொண்டாடப்படுகிறது.திருவண்ணாமலை உள்ளிட்ட புனித தலங்களில், திருக்கார்த்திகை ஜோதி ஏற்றப்படுவதை கண்டு தரிசிக்க, பொள்ளாச்சியில் இருந்து கணிசமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்தாண்டு வரும், 10ம் தேதி திருக்கார்த்திகை ஜோதி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வரும், 9 மற்றும், 10ம் தேதிகளில் பொள்ளாச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும், 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழநிக்கு, 10 பஸ்களும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள அப்பச்சிமார் மடத்துக்கு இரண்டு பஸ்களும் இயக்கப்படுகின்றன.பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்றவாறு, கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.