தமிழ்நாடு

கொர்ர்ர்...! கண் விழிக்கலையே கல்வித்துறை:பழைய பள்ளி கட்டடங்கள் 'பகீர்'17 பேர் பலிக்கு பின்பும் அலட்சியம்!

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019
Advertisement
 கொர்ர்ர்...! கண் விழிக்கலையே கல்வித்துறை:பழைய பள்ளி கட்டடங்கள் 'பகீர்'17 பேர் பலிக்கு பின்பும் அலட்சியம்!

கோவை:மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்த பின்பும், அரசுப்பள்ளிகளில் சிதிலமடைந்த பள்ளி கட்டடங்களை, யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல நேரங்களில் கனமழை பெய்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத மாவட்ட நிர்வாகம், நாளை பள்ளி நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்குமா...போன உயிர்கள்தான் மீண்டும் வருமா?

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2014ல், இடியும் தருவாயில் உள்ள பள்ளி கட்டடங்கள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது. இக்கட்டடங்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி துறையுடன் இணைந்து இடிக்க வேண்டுமென, முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், 2017ல் உத்தரவிட்டார்.


எத்தனை கட்டடங்கள்?



கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலராக இருந்த கணேஷ்மூர்த்தி, வட்டார வாரியாக, சிதிலமடைந்த பள்ளி கட்டடத்தின் நிலை குறித்து, வீடியோ எடுத்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த ஆவணங்கள், பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, தொடக்க கல்வித்துறையின் கீழ், 353 பள்ளிகளில், 161 வகுப்பறை கட்டடங்கள், 163 சத்துணவு கூடங்கள், 112 கழிப்பறைகள், 20 பள்ளி சுற்றுச்சுவர் என, 314 வகை கட்டடங்களில், சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுதுகள் உள்ளன.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட, 35 பள்ளி வகுப்பறைகள், இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இக்கட்டடங்களை இடிக்கவோ, பழுது பார்க்கவோ பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்வியாளர்கள் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து அரசிடம் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யாமல், காரணங்களை மட்டுமே, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சி.இ.ஓ.,க்கள் மாறும் போதெல்லாமல், நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால், எந்த பணிகளும் நடந்தபாடில்லை. மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு பின்பும், கல்வித்துறை விழிக்காவிடில், அசம்பாவிதங்கள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடும்' என்றனர்.

இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்களின் பட்டியல், பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப் பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடமும் அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-அய்யண்ணன்,முதன்மை கல்வி அலுவலர்

தொடக்க கல்வித்துறையின் கீழ், 353 பள்ளிகளில், 161 வகுப்பறை கட்டடங்கள், 163 சத்துணவு கூடங்கள், 112 கழிப்பறைகள், 20 பள்ளி சுற்றுச்சுவர் என, 314 வகை கட்டடங்களில், சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுதுகள் உள்ளன. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட, 35 பள்ளி வகுப்பறைகள், இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன


சுற்றறிக்கை மட்டும் போதுமா?


இது போன்ற கட்டடங்களை இடிக்க அறிவுறுத்தாமல், மழைக்காலம் வரும்போதெல்லாம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, சுற்றறிக்கை மட்டுமே வெளியிடப்படுகிறது.சமீபத்தில் இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையிலும், பழுதடைந்த கட்டடங்கள், சுற்றுச்சுவர் அருகில், மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. அசம்பாவிதங்கள் நடந்தால், உரிய பள்ளி தலைமையாசிரியரே, பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது போன்ற சுற்றறிக்கைகள், 'நாங்க அன்னிக்கே சுற்றறிக்கை விட்டு எச்சரித்தோம்; எங்க மேல தப்பில்லை' என்ற, பள்ளிக்கல்வித்துறையின் தற்காப்பு ஆயுதமாகவே பார்க்கப்படுகிறது.


இடிக்க காத்திருக்கும் பள்ளிகள்



* மாதம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய ஓட்டு கட்டடம், இப்போதோ எப்போதோ என்ற நிலையில் உள்ளது.

* காளிமங்கலம் ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியிலும், அபாயகரமான கட்டடங்கள் காட்சி பொருளாக உள்ளன.
* வடிவேலாம்பாளையம், முகாசிமங்கலம் அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் பிளந்த நிலையில், நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன.

* நாதேகவுண்டன் புதுாரில் அரசு பள்ளி வளாகத்தில், ஓட்டை விழுந்த நிலையில், ஒரு கட்டடம் உள்ளது.நடப்பாண்டு, நகர் பகுதிகளுடன் ஒப்பிடும் போது, தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே, பாழடைந்த கட்டடங்களை இடித்து அகற்றுவதுடன், இடியும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர்களையும் அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X