மகளிருக்கு முகவாதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிருக்கு முகவாதம்

Added : டிச 05, 2019

மார்கழி பனியில் நடப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அதிக குளிரால் முகவாதம் ஏற்படும். குறிப்பாக பெண்களை அதிகளவில் இது பாதிக்கிறது என்கிறார், கோயமுத்துார் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் ராஜேஸ் கண்ணா.


முக வாதம் என்றால் என்ன?

கார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் முகவாதம் ஏற்படும் என்பது, நாம் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது.


இதன் அறிகுறிகள் என்ன?

பேசும்போது வாய் கோணும். பாதிக்கப்பட்ட கண்ணை முழுமையாக மூட முடியாது. பாதிக்கப் பட்ட பக்கம் வலது அல்லது இடது கண்ணில், கண்ணீர் சொட்டும். தண்ணீர் குடிக்கும் போது வாய் வழியாக தண்ணீர் வழியும். சாப்பிடும் போது கன்னத்தின் உட்பகுதி பற்களுக்கிடையே சிக்கும்.


முக வாதம் ஏற்பட காரணம் என்ன?

அதிக பனி காற்று, காது வழியாக புகுவதால் முக அசைவுகளுக்கு, உதவும் நரம்பில் நீர் கோர்த்து நரம்பு செல்லும் சிறிய துவாரத்தை அழுத்துவதால், முக தசைகள் செயலிழந்து, முக வாதம் ஏற்படுகிறது.அதிகாலை விழிக்கும் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதிகாலை நடைபயிற்சி, அதிகாலை இரு சக்கர வாகன பயணம், ஜன்னலோர பேருந்து, ரயில் பயணம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. காது வலி மற்றும் அடைப்பு, 'ஏசி' அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது, உமிழ் நீர் சுரப்பி அறுவை சிகிச்சை போன்ற காரணங்களாலும் முகவாதம் வரலாம்.


முகவாதத்தை முழுமையாக குணப்படுத்த முடியுமா?அறிகுறிகள் தென்படும் போதே, பொது அல்லது நரம்பியல் பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக குணப்படுத்தலாம். பிசியோதெரபி சிகிச்சையில் செயலிழந்த சதைகளை, மிண்தூண்டல் முறையில் வலுப்படுத்தி, முகத்தை சீரமைக்க முடியும். இதனால் முகவாதம் வந்த சுவடே தெரியாமல், முக அமைப்பை திரும்ப கொண்டு வர முடியும்.


முகவாதம் வராமல் தடுக்கும் என்ன வழிமுறைகள் உள்ளன?

அதிகாலை மற்றும் நள்ளிரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. இருசக்கர வாகன பயணத்தின் போது காதில் பஞ்சு, ஸ்கார்ப், ஹெல்மெட் அணிவதன் மூலம் பனிக்காற்று காதில் புகாமல் தடுக்க முடியும். பேருந்து, ரயில் பயணத்தின் போது, ஜன்னலை மூடி காதில் பனிக்காற்று புகாதவாறு தடுக்க வேண்டும். காது வலி மற்றும் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, உடனே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X