திருப்பூர்:திருப்பூர் எம்.ஜி.ஆர்., நகரில், அங்கன்வாடி மையம், செயல்படுகிறது. வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், 15 பேர் உட்பட, 18 பேர் படிக்கின்றனர்.
இங்கு குழந்தைகளுக்கு வழங்குவதற்கான முட்டைகள், காலேஜ்ரோடு, சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. முட்டை அட்டைகளை பல நேரங்களில், போக்குவரத்து நிறைந்த ரோட்டைக் கடந்து, மாணவியரே கொண்டு வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானாம்பாள் கூறுகையில், 'பள்ளி, அங்கன்வாடி மையம் இரு இடங்களிலும் முட்டை தனித்தனியே இறக்கப்படுகிறது. அங்கு முட்டை முடிந்தால், இங்கு வந்து ஊழியர்கள் எடுத்து செல்வர். மாணவிகள் முட்டை எடுத்து சென்றிருக்க, வாய்ப்பு இல்லை,' என்றார்.
அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஆசி ரியை கல்பனா கூறுகையில், 'இரண்டு அட்டைக்காக இங்கு முட்டை கொண்டு வர முடியாது என முட்டை இறக்குபவர்கள் தெரிவித்து விட்டனர். அதனால், நாங்கள் சென்று முட்டை எடுத்து வருவோம். சறுக்கலான பாலம், கரடுமுரடான சாலை என்பதால் வாகனத்தில் கடக்க முடியாது. மாணவி கொண்டு வந்த மறு நிமிடமே முட்டையை வாங்கி விட்டோம்,' என்றார். அங்கன்வாடி மையத்திற்கே முட்டைகள் கொண்டு வந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.