கும்மிடிப்பூண்டி:இரு கிராமங்களை இணைக்கும் பழமையான சிறு பாலம், பழுதாகி உள்ளதால், கால்வாயில் வெள்ள பெருக்கெடுத்தால் உடையக் கூடும் என, மக்கள் அஞ்சுகின்றனர்.
கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் ஊராட்சியில், ஆர்.என்.கண்டிகை மற்றும் ஏ.என்.குப்பம் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன.இரு கிராமத்தையும் இணைக்கும் ஒன்றிய சாலையில், அணைக்கட்டு அருகே, சிறு பாலம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான அந்த பாலம், பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.அணைக்கட்டில் இருந்து, ஏரிகளுக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே அந்த பாலம் உள்ளது.தற்போது பெய்த மழையால், அணைக்கட்டு நிரம்பி, அந்த கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அந்த கால்வாயில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால், பாலம் உடையக் கூடும் என, இரு கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.ஆகவே, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், உடனடியாக அந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என, இரு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.