திருவள்ளூர்:பருவ மழையால், சிவம் நகர் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால், வெளியேற வழியின்றி மக்கள் பரிதவிக்கின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பாதாள சாக்கடை திட்டம் மூலம் பூமிக்கடியில் கொண்டு செல்லப்படுகிறது.இந்த கழிவு நீர், 22வது வார்டு பகுதியில் உள்ள, சிவம் நகர், புட்லுார் ஏரி அருகில், சுத்திகரிப்பு மையத்திற்கு செல்கிறது.காக்களூர் மற்றும் புட்லுார் ஊராட்சி எல்லைக்கு அருகில், இந்த சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டு உள்ளது.இதற்கு அருகில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வீடுகளை சுற்றி தேங்கி, பாசி படர்ந்துள்ளது. இதனால், வீடுகளில் வசிப்போர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்த நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.
இதனால், பூங்கா நகர், காக்களூர், மாருதி நகர் நியூ டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், சிவம் நகரில் வந்தடைகிறது.இங்கிருந்து, புட்லுார் ஏரிக்கு செல்லும் கால்வாய் குறுகலாக இருப்பதாலும், நடுவில் ரயில் தண்டவாளம் இருப்பதாலும், சிவம் நகரைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து, தீவு போல் காட்சியளிக்கிறது.வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.
எனவே, கலெக்டர் தலையிட்டு, சிவம் நகரில் தேங்கிய வெள்ள நீரை, வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.