அவிநாசி:அவிநாசியில் உள்ள துணிக்கடையில் இன்ஸ்பெக்டர் பெயரை சொல்லி மோசடி செய்த நபர்,'எஸ்கேப்' ஆனார்.
அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடையில், நேற்று பிற்பகல், ஒரு வாலிபர் துணி எடுக்க வந்துள்ளார். விலை உயர்ந்த சேலை உள்ளிட்ட பல வகை துணிகளை எடுத்துள்ளார். முடிவில், கடை ஊழியர்கள், 15 ஆயிரம் ரூபாய்க்கு 'பில்' கொடுத்துள்ளனர்.' 'அவிநாசி, இன்ஸ்பெக்டர் தான், துணி எடுத்து வரச் சொன்னதாக வும், அவரது வீட்டு விசேஷத்துக்கு, அவரது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக, துணி எடுக்கிறார்.
தன்னுடன் யாராவது ஒருவர் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்தால், அவரிடம் பணம் வாங்கித் தருவதாகவும்'', கூறியுள்ளார்.வாங்கிய ஆடைகளுடன் அந்த வாலிபர், தான் வந்த டூவீலரில் முன் செல்ல, ஊழியர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஊழியர்கள் அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் நின்ற நிலையில், துணி எடுத்த முன்னால் சென்ற வாலிபர் அதிவேகமாக சென்று, நெரிசலில் தலைமறைவானார்.
பின், கடை ஊழியர்கள், போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்த்த போது, அங்கு அந்த வாலிபர் இல்லை; இதுகுறித்து, போலீசாரிடம் கேட்டபோது, 'துணி எடுக்க இன்ஸ்பெக்டர் யாரையும் அனுப்பவில்லை; அந்த வாலிபர், மோசடி நபர்' என கூறியுள்ளனர்.மோசடி செய்யப்பட்டதை அறிந்த கடை உரிமையாளர், அவிநாசி போலீசில் புகார் அளித்தார். கடையில் இருந்த 'சிசிடிவி.,' கேமராவில் பதிவாகியிருந்த மோசடி ஆசாமியின் புகைப்படத்தை வைத்து, போலீசர் விசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட வாலிபர் இந்த துணிக்கடைக்கு செல்வதற்கு முன்பே அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள துணிக்கடையில் இதே போன்ற மோசடி செய்ய முற்பட்டுள்ளார்.கடை உரிமையாளர் சுதாரித்துக் கொண்டு, பணம் வாங்கி வந்து, துணி எடுத்துக்கொள்ளுமாறு கூறியதால், நஷ்டத்தில் இருந்து தப்பித்தார்.இச்சம்பவங்கள், வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.