புதுடில்லி: டில்லியில், 2012ல், நிர்பயா என்ற மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிர்பயா, உயிரிழந்தார். இந்த வழக்கில், வினய் குமார், முகேஷ், பவன், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இவர்களது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எந்த நேரத்திலும், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படலாம். ஆனால், தற்போது தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி திஹார் சிறையில், ஊழியர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு, நிரந்தரமாக ஒரு ஊழியரை பணியமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தமுறையில் தான், ஆட்களை பணியமர்த்த முடியும். உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், ஆட்கள் கிடைக்கின்றனரா என முயற்சித்து வருகிறோம் என சிறை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரவிக்குமார், என்ற 40 வயது நபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் ஒன்று அனுப்பினார்.அதில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிட தம்மை நியமிக்க வேண்டியும், இதன் மூலம் பலியான மாணவியின் ஆன்மா சாந்தி அடையும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.