காளையார்கோவில்:காளையார்கோவில் விவசாயிகள் விவசாய தொழில்நுட்ப பயிற்சிக்காக புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வேளாண்மை துறையில் 'அட்மா' விரிவாக்க சீரமைப்பு திட்டம் மூலம் விவசாயிக்கு உள் மற்றும் வெளி மாநில பயிற்சிகள், கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி, உள்மாவட்ட பயிற்சி, செயல் விளக்கம் அளிக்கப்படுகின்றன. இதன்படி காளையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் 40 விவசாயிகள் 3 நாள் பயணமாக அறந்தாங்கி, இலுப்பூரில் பயிற்சி பெற்றனர்.
காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்நாதன் துவக்கி வைத்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர் அகிலா பாரம்பரிய நெல் வினியோகம், கொள்முதல், இயற்கை உரம் தயாரித்தல் குறித்து விளக்கினார். கறவைமாடு, நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்ப்பு, பராமரிப்பு குறித்து தட்சிணாமூர்த்தி விளக்கம் அளித்தார்.
தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன், தென்னை மூலம் உருவாகும் நீராபாயிண்ட், நீராமதிப்புக்கூட்டல், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு முறைகள் பற்றி பயிற்சி அளித்தார். தொழில்நுட்ப மேலாளர் தம்பித்துரை ஏற்பாட்டை செய்திருந்தார்.