காரியாபட்டி:காரியாபட்டியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வெளியில் நடமாட மக்கள் அச்சப்படுகின்றனர்.காரியாபட்டிக்கு சுற்று கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வதால் பஸ் ஸ்டாண்ட், முக்குரோடு, கள்ளிக்குடி ரோடு பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம், டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் மிகுந்து காணப்படும். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது, ரோட்டை மறித்த ஒன்றுக்கொன்று சண்டையிடுவதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதிக சப்தத்துடன் குரைப்பதால் வெளியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். நாய்களை காணும் குழந்தைகளும் மிரளுகின்றனர். அருகில் கடைகளுக்குக்கூட செல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர். கோழிகளை விரட்டி கடிக்கிறது. நோய் தாக்கிய நாய்களை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. ஆட்களை கடிக்கும் முன் இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு பகுதிகளிலிருந்த நாய்களை காரியாபட்டி பகுதிகளில் இறக்கிவிட்டனர். இதில் இனப்பெருக்கம் ஏற்பட்டு தற்போது 50க்கு மேற்பட்ட நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி திரிவதால் அச்சுறுத்தலாக உள்ளது. கட்டுப்படுத்த அதிகாரிகள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.