கொசுவை கொல்லும் குறுக்கு வலை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!

கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள்.

இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாக கொண்டிருந்தன.

இதனால், வலையின் மேற்பரப்பில், பூச்சிக்கொல்லி பூசப்பட்ட குறுக்கு வலை ஒன்றை கட்டினால், பெரும்பாலான கொசுக்களை மட்டுமல்ல, பூச்சிகளையும் கொல்லலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த குறுக்கு வலை, மனிதர்களின் கைகள் அடிக்கடி படாத வலையின் மேற்பகுதியில் கட்டியிருப்பதால், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு பாதிப்பிலிருந்து பயனாளிகள் தப்பிக்கலாம். அதே நேரம், குறுக்கும் மறுக்குமாக பறக்கும் கொசுக்கள், நிச்சயமாக குறுக்கு வலையில் சிக்கி, நச்சு மருந்தால் கொல்லப்படும். பூச்சிகளும் கொல்லப்படுவது போனஸ்!

ஆதலினாலே, விரைவில் கொசு வலை விற்போர், சற்று கூடுதல் கட்டணத்திற்கு, பூச்சிக்கொல்லி மருந்து பூசப்பட்ட குறுக்கு வலையையும் சேர்த்து விற்பர் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X