பிரதமர் மோடி அசாதாரண மவுனம் ஏன்? சிதம்பரம் விமர்சனம்| Dinamalar

பிரதமர் மோடி அசாதாரண மவுனம் ஏன்? சிதம்பரம் விமர்சனம்

Updated : டிச 07, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (61)
Share
Modi,chidambaram,சிதம்பரம்,PM,பிரதமர்,மோடி,அசாதாரண மவுனம்,விமர்சனம்

புதுடில்லி: ''பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள்வதற்கு என்ன செய்வது என தெரியாமல் மத்திய அரசு உள்ளது. இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அசாதாரண மவுனம் காக்கிறார்,'' என, காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

ஊழல் வழக்கில் ஜாமின் கிடைத்ததையடுத்து, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரம், 106 நாட்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சிறையில் இருந்து வந்த உடன், ஜம்மு - காஷ்மீர் செல்ல நினைத்தேன். அங்குள்ள மக்களுக்கான சுதந்திரம், ஆக., 5ல் பறிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்தால், அங்கு செல்வேன். பொருளாதார மந்த நிலை என்பது ஒரு சுழற்சி தான் என, பா.ஜ., அரசு நினைக்கிறது. ஆனால், ஏழு மாதங்களாகியும் மந்த நிலை தொடர்கிறது. இந்த அரசு தவறுகளை செய்கிறது. என்ன செய்வது என்பது தெரியாததால், இந்த தவறுகளை செய்கிறது.

செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, வரி பயங்கர வாதம் என, தொடர்ந்து முரட்டு குணத்துடன் இந்த அரசு செயல்படுகிறது. அதனால் தான், நல்லதை சொன்னாலும் கேட்பதில்லை. தற்போதுள்ள நிலையில், காங்., மற்றும் சில கட்சி கள், பா.ஜ.,வை விட மிகச் சிறப்பாக இந்தப் பிரச்னையை கையாண்டு இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது மிகவும் அசாதாரண மவுனமாக உள்ளார். அவர் மவுனமாக இருப்பதால், அமைச்சர்கள், பொய்களை, கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜ்யசபா, எம்.பி., யாக உள்ள சிதம்பரம், நேற்று பார்லி.,க்கு வந்தார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். மதியம், ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்ட வரை, அவர் அமர்ந்துஇருந்து, சபை நடவடிக்கை களை கவனித்தார். முன்னதாக, வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, பார்லி., வளாகத்தில், காங்., - எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். அதிலும் அவர் பங்கேற்றார்.


பா.ஜ., குற்றச்சாட்டு:

மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: 'மத்திய அமைச்சராக இருந்தபோது, என் மீது எந்தக் குற்றச் சாட்டும் இல்லை' என, சிதம்பரம் கூறியுள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல் தொடர்பான வழக்கில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 'ஜாமின் வழங்கிய போது, வழக்கு தொடர்பாக எதுவும் பேசக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த நிபந்தனையை அவர் மீறியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


நிர்மலா என்ன சாப்பிடுகிறார்?

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 'எங்களுடைய குடும்பத்தில், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகளவில் பயன்படுத்த மாட்டோம்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது குறித்து, சிதம்பரம் கூறியுள்ளதாவது: நான் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்யவில்லை. அவர் கூறியதைதான் கூறுகிறேன். 'நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன்' என, அவர் கூறி உள்ளது, அரசின் மனப்போக்கை வெளிப்படுத்துகிறது. அவர் வெங்காயம் சாப்பிடாவிட்டால், 'அவகேடோ' பழத்தையா சாப்பிடுகிறார்? ஏற்கனவே சரியாக திட்டமிட்டுஇருந்தால், தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அது எப்போது வரும் என்பதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X