சென்னை: 'பெண்களுக்கு எதிரான குற்றங்களை, இரும்பு கரத்தால் அடக்கி, தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: வன்புணர்வு கொடுமைகளில் இருந்து, பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட, 'நிர்பயா நிதி'யில், தமிழகத்திற்கு, 190 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., அரசு, வெறும், 6 கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது. கோவையில், பிளஸ் 1 படிக்கும் சிறுமி, கூட்டு வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதற்கு முன், துடியலுார் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள, ஆண்டி சிறுவள்ளூரில் இளம் பெண்ணின் மர்ம மரணமும், பெண்களை பெரும் பீதியடைய வைத்துஉள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அ.தி.மு.க., அரசு உண்மை குற்றவாளிகள் தப்பிக்க, காவல் துறையை அப்பட்டமாகப் பயன்படுத்தியதால், பெண்கள் அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில், அரசின் படுதோல்வி நிரூபணமாகி உள்ளது.
நிர்பயா நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள, பெண்களின் பாதுகாப்பிற்கான, 190 கோடி ரூபாய் திட்டங்களை உடனே செயல்படுத்த முன் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரத்தால் அடக்கி, ஒடுக்கி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிதம்பரத்திடம் நலம் விசாரிப்பு:
தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், '106 நாட்களாக, சிறையில் இருந்து, ஜாமினில் வெளிவந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம், தொலைபேசி வாயிலாக, ஸ்டாலின், நலம் விசாரித்தார்' என, கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE