கட்டாய ஓய்வு திட்டம் அமல்? அரசு துறைகளில் கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய ஓய்வு திட்டம் அமல்? அரசு துறைகளில் கணக்கெடுப்பு

Updated : டிச 07, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (7)
Share
சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்; 50 வயதை கடந்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. அவர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்ப அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் '30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றால் சலுகைகள் வழங்கப்படும்' என
voluntary retirement,VRS,கட்டாய ஓய்வு,திட்டம்,அமல்,அரசு துறை,கணக்கெடுப்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்; 50 வயதை கடந்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. அவர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்ப அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் '30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றால் சலுகைகள் வழங்கப்படும்' என தெரிவித்தார். அதேபோல மத்திய அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் அல்லது 55 வயதை நிறைவு செய்திருந்தால் அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் 30 ஆண்டுகள் பணி முடித்தவர் மற்றும் 50 வயதை கடந்தவர்கள் விபரத்தை அளிக்கும்படி கேட்கப்பட்டு உள்ளது. உதாரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் சார்பில் அனைத்து ஐ.டி.ஐ. முதல்வர்களுக்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விபரம்:

பணி நியமனம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் முடித்த அலுவலர்கள், 50 வயது நிறைவடைந்த பிரிவு அலுவலர்கள், 55 வயது நிறைவடைந்த அடிப்படை பணியாளர்கள் அனைவரும் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள். அவர்கள் குறித்த விபரங்களை இதுவரை அனுப்பி வைக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் பணிபுரிந்த நாட்கள் விபரத்தை அனுப்பி வைக்கவும். டிச., 10க்குள் விபரம் அனுப்பவில்லை என்றால் தங்கள் அலுவலகத்தில் கட்டாய் ஓய்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டிய பணியாளர்கள் எவரும் இல்லை என்று கருதப்படும்.

அதன் பின் அத்தகைய பணியாளர்கள் இருக்கும் தகவல் தெரிய வந்தால் அதற்கான பொறுப்பை அலுவலக தலைவர்களே ஏற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து துறை தலைவர்களுக்கும் அந்தந்த துறை உயர் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள்; 50 வயதை கடந்தவர்கள் விரும்பினால் விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறலாம் அல்லது அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காகவே இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் 50 அல்லது 55 வயது நிறைவடைந்தவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்படும். பின் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற உடல் தகுதியுடன் உள்ளனரா; அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் உள்ளதா என்று கமிட்டி ஆய்வு செய்யும்.

ஆய்வு முடிவில் தொடர்ந்து பணியாற்ற தகுதியற்றவர்களாக இருப்போரை ஓய்வில் செல்லும்படி அறிவுறுத்துவர். இது வழக்கமான நடைமுறை. தற்போது மத்திய அரசு கட்டாய ஓய்வு திட்டத்தை அறிவித்ததால் தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இவ்வாறு கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X