தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி

Updated : டிச 06, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (5)
TN,Tamil Nadu,SC,Supreme court,election,தமிழகம், உள்ளாட்சி தேர்தல், நடக்குமா?, உச்ச நீதிமன்றம், தீர்ப்பு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரகம் நகர்புறம் என இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வந்தது. இதற்காக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை செய்யப்பட்டது. இடஒதுக்கீடு அடிப்படையில் ஒரு சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே பிரிக்கப்பட்டன.

இதற்கிடையே விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார், மாவட்டங்களை பிரித்து ஐந்து புதிய மாவட்டங்களை அரசு உருவாக்கிஉள்ளது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், பதவிகளுக்கு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு அவசர சட்டமும் பிறப்பிக்கப் பட்டது.

ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் 2ம் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. நிர்வாக காரணங்களுக்காக மேயர் உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதனால் 'இடஒதுக்கீடு முறையை முறையாக பின்பற்ற வேண்டும். புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்ய வேண்டும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இது அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் அதில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என ஒன்பது மாவட்டங்களை விடுத்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியது. இதை மாநில தேர்தல் ஆணையம் ஏற்றது.

ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் அறிவிக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் வாதாடப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னும் இவ்வழக்கில் நேற்று எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தலாம். அந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.


ஏன் இந்த குழப்பம்:

* உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம், எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. எந்தெந்த உள்ளாட்சி பதவிகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் மே மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆவணங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் இடஒதுக்கீடு தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது

* முதற்கட்டமாகவும் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலை ஆணையம் வெளியிடாததும் குழப்பத்திற்கு காரணமாகி விட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X