இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : தெலுங்கானா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்து, கொன்ற குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டது சரியான வழியல்ல என சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்து, பின் எரித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்திற்கு இன்று காலை நேரில் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், போலீசாரை தாக்கிவிட்டுதப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, போலீசார், அவர்களை அதே இடத்தில் வைத்து என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொது மக்களும், பெண்களும் தெலுங்கானா போலீசாருக்கு ரோஜா இதழ்களை தூவி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை வாழ்த்தி முழக்கமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், பலாத்காரம் ஒரு கொடூரமான குற்றம். அது சட்டத்தின் படி கடுமையாக தடுக்கப்பட வேண்டும். இதில் குற்றவாளிகளின் மோசமான செயல் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் என்கவுன்டரில் கொல்வது என்பது நமது அரசியலமைப்பிற்கு ஒரு கறை. உடனடி நீதி என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும், இது சரியான வழி அல்ல என தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கூறுகையில், ஐதராபாத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அதேநேரத்தில், பொறுப்பான உணர்வு, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். என்குவுன்டர் நடந்தது உண்மைதானா? அவர்கள் தப்பி செல்லமுயன்றனரா அல்லது போலீசார் வேறு எதையும் மறைக்க முயல்கின்றனரா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
காங்.,ன் திருநாவுக்கரசர் கூறுகையில், குற்றம் செய்பவர்கள் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது. குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் இந்த கருத்திற்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கார்த்தியையும், அவரது தந்தை சிதம்பரம் ஜாமின் பெற்றது குறித்தும் கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

டில்லி மனிதஉரிமைகள் ஆர்வலரும், பெண் வழக்கறிஞர் விருந்தா குரோவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்தில், இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த போலீசும் என்கவுன்டர் செய்ய முடியாது. ஒவ்வொரு என்கவுன்டரிலும் அதற்காக அந்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து, தண்டனை வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டே அறிவுறுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தை எதிர்த்து நூற்றுக் கணக்கானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE