'9 மாவட்டங்களை தவிர மற்றவற்றில் உள்ளாட்சி தேர்தல்'

Updated : டிச 08, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதற்காக, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,
உள்ளாட்சி தேர்தல்,உச்ச நீதிமன்றம், அனுமதி,9 மாவட்டங்கள்

புதுடில்லி : தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதற்காக, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு வரையறை செய்யப்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில், சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே பிரிக்கப்பட்டன. இதற்கிடையே, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார் மாவட்டங்களைப் பிரித்து, அரசு, ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியது.

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும், மாநில தேர்தல் ஆணையம், 2ம் தேதி, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. 'நிர்வாக காரணங்களுக்காக, மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் நடத்தப்படவில்லை' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அதேபோல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிடவில்லை. இது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால், 'இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்; புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை செய்ய வேண்டும்; அதன் பின்னரே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. இது, நேற்று முன்தினம் அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணை நடந்தது. அப்போது, 'பழைய மாவட்டங்கள், அதில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் என, ஒன்பது மாவட்டங்களை விடுத்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம்' என, நீதிபதிகள் கூறினர். இதை, மாநில தேர்தல் ஆணையம் ஏற்றது. ஆனால், வார்டு வரையறை மற்றும் இட ஒதுக்கீடு முறை சரி செய்யப்பட்டு, ஒரே நேரத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் அறிவிக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் வாதாடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில், நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:தமிழகத்தில் வார்டு வரையறை பணிகள் முடிந்த போது, 31 மாவட்டங்கள் தான் இருந்தன. ஆனால், அதன் பின், மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்ட போது, வார்டு வரையறை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை, மாநில அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகிறது.

அதனால், பழைய மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடிக்காமல், உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது.ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது அல்லது, புதிய மாவட்டங்கள் பிரிப்பை கிடப்பில் வைத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, தமிழக அரசுக்கு, இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயார் என, தமிழக அரசு கூறியுள்ளதை, உச்ச நீதிமன்றம் ஏற்கிறது.

அதனால், மற்ற பகுதிகளில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு முறை உட்பட அனைத்து பணிகளையும், நான்கு மாதங்களுக்குள் முடித்து, தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம், வேலுார், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
07-டிச-201901:18:31 IST Report Abuse
Arasu அந்த 9 மாவட்டங்கள் கர்நாடகவிலா இருக்கு.....என்ன ஒரு தீர்ப்பு....இந்தியாவில் படித்தவர்கள் தான் அடிக்க தப்பு செய்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X