தலை வணங்குகிறோம்! கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை..

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (33+ 450)
Advertisement
encounter,Telangana,Rape-murder,doctor,தெலுங்கானா,தலை வணங்குகிறோம்,கயவர்கள்,போட்டு தள்ளிய, கமிஷனர், சஜ்ஜனாரை..

ஐதராபாத் : ஐதராபாதில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த நான்கு பேரையும் போலீசார் நேற்று 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதை அடுத்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்ஷாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் மருத்துவர் கடந்த 27ம் தேதி இரவு மருத்துவமனையில் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெங்களூரு - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொண்டுபள்ளி சோதனைச் சாவடி அருகே வந்தபோது அவரது இரு சக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. அங்கு நின்றிருந்த லாரி தொழிலாளர்கள் நான்கு பேர் அவரிடம் வந்து உதவுவது போல் நடித்து அருகில் உள்ள மறைவான பகுதிக்கு கடத்திச் சென்றனர்.

பெண் மருத்துவரை சரமாரியாக தாக்கி அவரது வாயில் மதுவை ஊற்றினர். பின் ஒருவர் பின் ஒருவராக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். பின் அருகில் உள்ள ஒரு பாலத்துக்கு கீழே உடலை இழுத்து வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி ஓடினர். அடுத்த நாள் காலையில் போலீசார் அவரது உடலை கண்டுபிடித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் லாரி தொழிலாளர்கள் முகமது ஆரீப் 36, ஜொலு நவீன் 20, ஜொலு சிவா 20, சென்ன கேசவலு 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பார்லிமென்டிலும் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'குற்றவாளிகளை எந்தவித விசாரணையும் இன்றி துாக்கிலிட வேண்டும்' என பெண் எம்.பி.க்கள் ஆவேசப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நான்கு பேரையும் தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் நேற்று அதிகாலையில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று 'குற்றம் எப்படி நடந்தது' என்பதை நடித்துக் காட்டும்படி கூறினர்.

இதற்கு பின் நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நேற்று அதிகாலை தொண்டுபள்ளி சுங்கச் சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பெண் டாக்டரின் இரு சக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது குறித்தும் அவரை கடத்திச் சென்றது குறித்தும் அவர்கள் நடித்துக் காட்டினர். பாலியல் பலாத்காரம் நடந்த இடத்துக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது நான்கு பேரில் இருவர் போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற இருவரும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


கொண்டாட்டம்


நேற்று காலையில் கண் விழித்த தெலுங்கானா மாநில மக்களுக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் இந்த என்கவுன்டர் குறித்த தகவல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பெண் மருத்துவரை கொடூரமாக கொலை செய்த கயவர்களுக்கு சரியான தண்டனை கிடைத்தது. இதற்கு காரணமான போலீசார் வாழ்க' என கோஷம் எழுப்பினர்.

சிலர் உற்சாக மிகுதியால் போலீசாரை தோளில் துாக்கி வைத்து கோஷமிட்டனர். மேலும் சிலர் பாலத்தின் மீது ஏறி நின்று போலீசார் மீது பூக்களை துாவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐதராபாதில் உள்ள பெண்கள் கல்லுாரிகளில் படிக்கும் மாணவியர் பட்டாசுகளை வெடித்தும் ஆடிப் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தந்தை மகிழ்ச்சி


பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது: குற்றவாளிகள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை 'டிவி'யில் பார்த்து தெரிந்து கொண்டோம்; மகிழ்ச்சியாக உள்ளது. என் மகளின் ஆன்மா இனி சாந்தியடையும். தெலுங்கானா மாநில அரசுக்கும் சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெண் மருத்துவரின் சகோதரி கூறுகையில் 'போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கு நன்றி. இந்த சம்பவம் பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக அமையும்''என்றார்.


உண்மையான ஹீரோ


நான்கு குற்றவாளிகளையும் என்கவுன்டர் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரே நாளில் தெலுங்கானா மக்களின் ஹீரோவாகி விட்டார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கடந்த 1996ல் ஆந்திர கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான சஜ்ஜனார் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். கடந்த 2008ல் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் ஒரு கல்லுாரி மாணவி மீது மூன்று பேர் 'ஆசிட்' வீசி தாக்குதல் நடத்தினர். ஆசிட் வீசிய மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அப்போது வாரங்கல் எஸ்.பி.யாக இருந்த சஜ்ஜனார் தான் தற்போதைய என்கவுன்டருக்கும் வியூகம் வகுத்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.


திஷா!


டில்லியில் 2012ல் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவியின் அடையாளம் மற்றும் அவரது விபரங்கள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக 'நிர்பயா' என பெயரிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதேபோல் ஐதராபாத் பெண் மருத்துவரை பற்றிய அடையாளங்கள் மற்றும் விபரங்களை பாதுகாக்கும் வகையில் 'திஷா' என பெயர் மாற்றம் செய்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


'என்கவுன்டர்' நடந்தது எப்படி


கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்தோம். சம்பவ இடத்தில் அலைபேசி உள்ளிட்ட வேறு ஏதாவது தடயங்கள் கிடக்கின்றனவா என ஆய்வு செய்யவும் திட்டமிட்டோம். இதற்காக நேற்று காலை நான்கு பேரையும் அழைத்துச் சென்றோம். அப்போது ஆரீப் என்ற குற்றவாளியும் மற்றொருவனும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர்.

மற்ற இரு குற்றவாளிகளும் கல் கம்பு போன்றவற்றை எடுத்து போலீசாரை தாக்கினர். அப்போது ஆரீப் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனாலும் போலீசார் பொறுமையாக செயல்பட்டனர்; சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அவர்கள் தொடர்ந்து சுட்டதால் தற்காப்புக்காக திருப்பிச்சுட வேண்டியதாகி விட்டது.

இதில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடத்திய தாக்குதலில் ஒரு எஸ்.ஐ.யும், கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்தபோது குற்றவாளிகளின் கைகளில் விலங்கு எதுவும் மாட்டப்படவில்லை.

- சஜ்ஜனார், சைபராபாத் கமிஷனர்

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; ஆனால் உரிய விசாரணைக்குப் பின் நீதிமன்ற உத்தரவின்படியே தண்டனையை செயல்படுத்த வேண்டும். ஐதராபாத் என்கவுன்டர் எந்த சூழ்நிலையில் நடந்தது என தெரியவில்லை. போலீசார் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- ரேகா சர்மா, தலைவர் - தேசிய பெண்கள் ஆணையம்.

ஐதராபாத் போலீசாரின் நடவடிக்கையை வரவேற்கிறேன். உத்தர பிரதேசத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் உ.பி. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் விஷயத்தில் உ.பி. டில்லி போலீசார் தெலுங்கானா போலீசாரை பார்த்து பாடம் கற்க வேண்டும்.

-மாயாவதி, தலைவர் பகுஜன் சமாஜ்

குற்றவாளிகள் பிடிபட்டபோதே சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். ஆனாலும் தாமதமான முடிவு என்றாலும் இது நல்ல முடிவு; வரவேற்கிறேன்.

-ஜெயா பச்சன், எம்.பி. சமாஜ்வாதி

ஐதராபாத் போலீசாரின் நடவடிக்கை நாட்டில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை ஏற்க முடியாது; அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு உள்ளன. உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றங்கள் தான் தண்டனை வழங்க வேண்டும்.

-மேனகா, எம்.பி. - பா.ஜ
குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. குற்றவியல் சட்டத்தில் தீர்ப்பு தாமதமாவதால் மக்கள் அதில் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அரசும் நீதித்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குற்றவியல் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர் ஆம் ஆத்மி


விசாரணைக்கு உத்தரவு


மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐதராபாத் என்கவுன்டர் கவலை அளிக்கும் செயல். இது குறித்து கவனமாகவும் விரிவாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகள் விரைவில் ஐதராபாத் சென்று இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். சட்டத்தின் முன் குற்றவாளிகள் உட்பட அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.


போலீசாரின் 'ஹீரோ'


பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரின் புகைப்படத்தை தமிழக போலீசார் பலர் தங்களின் 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள பக்கங்களில் 'டிபி' எனப்படும் முகப்புபடங்களாக வைத்துள்ளனர்.


மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்


அகில இந்திய பெண்கள் முற்போக்கு அமைப்பின் செயலர் கவிதா கிருஷ்ணன் கூறியதாவது:பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முதல் காரணம் தெலுங்கானா மாநில அரசின் மோசமான நிர்வாகம் தான். பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தெலுங்கானா அரசு தோல்வி அடைந்து விட்டது. இதை மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். அவர்கள் கும்பல் தாக்குதலில் ஈடுபடுவோர் போல் செயல்படக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான பிருந்தா குரோவர் கூறுகையில் ''போலீசாரின் நடவடிக்கை ஏற்க முடியாததாக உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது போலீசார் மற்றும் அரசின் கடமை. இது தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.


'நிர்பயா' குடும்பத்தினர் வரவேற்பு


டில்லியில் 2012ல் ஒரு கும்பலால் 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் டில்லியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தற்போது ஐதராபாதில் நடந்த என்கவுன்டர் குறித்து நிர்பயாவின் பெற்றோர் கூறியதாவது: பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த விஷயத்தில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை அளித்து மற்ற மாநில போலீசாருக்கு தெலுங்கானா போலீசார் முன் மாதிரியாக திகழ்கின்றனர். எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் தண்டனை கிடைக்காதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்தாண்டு காஷ்மீரின் கதுவாவில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த சிறுமியின் பெற்றோரும் ஐதராபாத் என்கவுன்டரை வரவேற்றுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (33+ 450)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
08-டிச-201910:57:50 IST Report Abuse
Sukumar Talpady காங்கிரஸ் கட்சி கூட செய்திருக்கலாம் பா ஜ க மேல் பழியைப் போடுவதற்கு
Rate this:
Share this comment
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201919:17:07 IST Report Abuse
nan kuttravaligalukku vakalathu vaangum manitha urimai commission yen antha pathikapata pennirku kuralkuduka villai.
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201916:51:11 IST Report Abuse
Mani Our law system should be fully revamped. But our corrupt politicians will never do or fix the holes, If they did they cant do business. So, by doing this, people will not ask questions about that. This is a trick by KCR to be on safer side. If you wanna strict laws, follow US or Singapore.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X