'கட்' அடிக்கும் எம்.பி.,க்கள்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019
Share
Advertisement
delhi ush, எம்.பி., பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ., ஜார்க்கண்ட், அமித்ஷா,  காங்கிரஸ், பா.ஜ.,

பார்லிமென்ட் நடவடிக்கைகளில், எம்.பி.,க்கள் பங்கு பெறுவது வெகுவாக குறைந்துவிட்டது என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும் வருத்தப்படுகின்றனர். குறிப்பாக, பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என, பிரதமர் மோடி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும், சில பா.ஜ., - எம்.பி.,க்கள் எதையும் கண்டு கொள்ளாமல், பார்லிமென்ட் பதிவேட்டில் கையெழுத்து போட்டு, கழன்று கொள்கின்றனர். இதனால், பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து, 'இப்படி, 'கட்' அடிக்கும் எம்.பி.,க்களை எச்சரியுங்கள்' என, சொல்லியிருக்கிறார். பா.ஜ., - எம்.பி.,க்களின் இந்த நடவடிக்கையால் வெறுத்துப் போன மோடி, எம்.பி.,க்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என, சொல்லப்படுகிறது.எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள, ஓம் பிர்லா, ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு, எம்.பி.,யும் சபையில் தினமும் என்ன செய்கின்றனர்; எத்தனை கேள்விகள் கேட்டனர்; பார்லிமென்ட் விவாதத்தில் கலந்து கொண்டனரா; அப்படி கலந்து கொண்டால் என்ன பேசினர் என்பதையெல்லாம், லோக்சபாவின் இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்டுள்ளார். இதனால், தங்கள் தொகுதி எம்.பி.,க்கள் என்ன செய்தனர் என்பதை, ஓட்டு போட்ட மக்கள் தெரிந்து கொள்ள முடியும். இதைச்செய்தாலாவது, எம்.பி.,க்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வர் என, சபாநாயகர் எதிர்பார்க்கிறார்.


தொத்தல் வீடுகளில் மத்திய அமைச்சர்கள்

டில்லியில், மத்திய அமைச்சர்களுக்கு, பார்லிமென்டிற்கு அருகே அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததுமே பரந்த புல்வெளி. ஒரு கல்யாணமே செய்யக் கூடிய அளவிற்கு பெரியது. பிறகு வரவேற்பறை. பங்களாவுக்குள் நிறைய அறைகள். இவற்றை தாண்டி பின்னால் போனால், மீண்டும் மிகப் பெரிய புல்வெளி. காலையில், 'வாக்கிங்' போக அமைச்சர்கள் வெளியே போக வேண்டியதில்லை. வீட்டிற்குள் புல்வெளியில் நடை பழகலாம்; அவ்வளவு பெரியது.மத்திய அமைச்சர்கள், இப்படி பிரமாண்டமான, வசதியான பங்களாக்களில் வசித்தாலும் அவர்கள் சந்தோஷமாக இல்லை. குறிப்பாக, சப்தர்ஜங் சாலையில் உள்ள பங்களாக்களில் வசிக்கும் அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட சில அமைச்சர்கள், இப்பகுதியில் உள்ள பங்களாக்களில் தான் வசிக்கின்றனர்.அமைச்சர்களின் கவலைக்கு காரணம், மழை பெய்தால் பல அறைகளில் நீர் ஒழுகுகிறது. மழை இல்லாத சமயங்களில், வீட்டின் மேலே வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கிலிருந்து ஒழுகல். இன்னொரு பக்கம், பல இடங்களில் சிமென்ட் பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறது.என்ன தான் ரிப்பேர் செய்தாலும், நீர் ஒழுகுவதும், சிமென்ட் விழுவதும் நிற்கவில்லை. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின், சப்தர்ஜங் சாலையில் வசிக்கும் அமைச்சர்கள் ஒன்று கூடி, 'என்ன உங்கள் வீட்டில், நீர் ஒழுகுவது நின்றுவிட்டதா' என, விசாரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.இந்த அமைச்சர்கள், தங்களைச் சந்திக்க வரும் வி.ஐ.பி.,க்கள் மற்றும் கட்சிக்காரர்களை வீட்டிற்கு அழைப்பது இல்லை. வீடு இருக்கும் நிலையில், அவர்களை எப்படி இங்கே அழைப்பது என வெறுத்துப் போய் சொல்கின்றனர். 'பொருளாதார பிரச்னைகளை எதிர் கொண்டு தீர்வு காணும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வீட்டுப் பிரச்னையை தீர்க்க முடியவில்லையே' என, சக அமைச்சர்கள் ஆதங்கப்படுகின்றனர்.


தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி பூசல்

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கான கவர்னராக பதவியேற்ற பின், மாநில தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த வாரம், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி. நட்டா, ஒரு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தமிழக பா.ஜ., தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, கட்சியில் உள்ள கோஷ்டிகளைக் கண்டு, அவர் வெறுத்துப் போய்விட்டார். 'தமிழக காங்கிரசையே மிஞ்சும் அளவிற்கு, தமிழக பா.ஜ., கோஷ்டி சண்டைகள் இருக்கிறதே' என, டில்லி தலைவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் நட்டா.தமிழகத்தில், பா.ஜ.,வை ஒரு வலுவான கட்சியாக மாற்ற வேண்டும் என, பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழக பா.ஜ., தலைவர்கள், இதைப்புரிந்து கொள்ளாமல், சுயநலமாக இருக்கின்றனரே எனவும் அவர் நொந்து போயிருக்கிறார்.தமிழக பா.ஜ., விவகாரங்களையும், கோஷ்டிப்பூசல்களையும் அமித் ஷாவிடம் விலாவாரியாக எடுத்து சொல்லியிருக்கிறார் நட்டா. விரைவில், அதாவது பொங்கல் சமயத்தில், தமிழக பா.ஜ.,விற்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. அந்த புதிய தலைவர், எந்த ஒரு கோஷ்டியை சாராதவராகவும், கட்சியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும் என்கிறார் அமித் ஷா.


ஜார்க்கண்டில் பா.ஜ., அவுட்?


ஜார்க்கண்ட் மாநிலத்தில், தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு, முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.கடந்த வாரம், இங்குள்ள ஒரு தொகுதியில், பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற அமித் ஷா அதிர்ச்சியடைந்தார். காரணம், கூட்டம் நடந்த மைதானம் காலியாக இருந்தது தான். வெறும், 15 ஆயிரம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். கோபப்பட்ட ஷா, பொதுக் கூட்ட மேடையிலேயே, அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கண்டபடி பேசிவிட்டார்.'கடந்த, 2014 தேர்தலில், இதே இடத்திற்கு நான் பிரசாரம் செய்ய வந்த போது, மக்கள் கூட்டம் அலை மோதியது. பா.ஜ., தொண்டர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆனால், இப்போது மக்களையும் காணோம், உற்சாகமும் இல்லை. நீங்கள் எப்படி எம்.எல்.ஏ.,வாக முடியும்' என, கூட்டத்தில் முகத்திற்கு நேராக பேசிவிட்டார் அமித் ஷா.இது, மேடையில் இருந்தவர்களையும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டம் என்பதை, அமித் ஷாவின் பேச்சு உணர்த்திவிட்டது என, பேசப்படுகிறது. முதல்வர் ரகுபர் தாஸ் வெற்றி பெறுவதே சந்தேகம் என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். ஜாம்ஷெட்பூர் கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார் தாஸ். இவரை எதிர்த்து போட்டியிடுபவர், இவருடைய அமைச்சரவையில் இருந்த சரயு ராய். இவருக்கு, தாஸ் சீட் கொடுக்காததால், பா.ஜ.,விலிருந்து விலகி, முதல்வரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார். செல்வாக்கு மிக்க தலைவரான ராய் போட்டியிடுவதால், தாஸ் வெற்றி பெற மாட்டார் என, சொல்லப்படுகிறது. ஜார்க்கண்டில், பா.ஜ., பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கஷ்டம் தான் என, பா.ஜ., தலைவர்களே ஒத்துக் கொள்கின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில், பா.ஜ., ஏற்கனவே ஆட்சியை பறி கொடுத்துவிட்டது. சமீபத்தில், மஹாராஷ்டிராவில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும், அங்கே ஆட்சி அமைக்க முடியவில்லை. இதைவைத்து, 'பா.ஜ.,வின் இறங்கு முகம் ஆரம்பித்துவிட்டது' என்கின்றனர் காங்கிரசார்.


நாய்களின் விசுவாசம்

ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவது போல, இந்த நாய்களும் சில ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெறுகின்றன. இப்படி ஓய்வு பெற்ற நாய்கள், ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும்; சில சமயம் மற்றவர்களும் வாங்கிக் கொள்ளலாம்.இந்நிலையில், திரிணமுல் கட்சியின், எம்.பி., காகோலி கோஷ் தஸ்திதார், கடந்த மாதம், 'ரிட்டையர்' ஆன, ஜெஸ்ஸி என்ற, 'ஜெர்மன் ஷெப்பர்ட்' இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கினார். 7 வயதான இந்த நாய், சிறப்பாக பணியாற்றியதற்காக, தங்க மெடல் மற்றும் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.டில்லியில், காகோலி வசிக்கும் அரசு பங்களாவில் குடியேறியிருக்கும் ஜெஸ்ஸி, எந்த நேரமும் சோகத்துடன் காணப்படுகிறதாம். காகோலியின் டிரைவர், காரை எடுத்து எங்கு போனாலும், அவர் பின்னாலேயே ஓடிவிடுகிறதாம். எங்கிருந்து வந்தோமோ, மீண்டும் அங்கேயே போக வேண்டும் என்பதால் தான், ஜெஸ்ஸி இப்படி செய்வதாக, கால்நடை டாக்டர்கள் காகோலியிடம் தெரிவித்துள்ளனர்.டில்லியில் இருந்தால்தானே இந்த பிரச்னை என யோசித்த காகோலி, தன் தொகுதியான, மேற்கு வங்கத்தில் உள்ள பராசத் என்கிற ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளாராம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X