ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி| Dinamalar

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Added : டிச 08, 2019
 ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில், நேற்று விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் பலியானார்.

ஜார்க்கண்ட்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக, 13 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக, 20 தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது.இதற்காக, அந்த தொகுதிகளில், 6,066 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 772 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. நக்சலைட் ஆதிக்கம் உள்ள தொகுதிகளிலும் தேர்தல் நடந்ததால், போலீசார், துணை ராணுவப் படையினர் உட்பட, 42 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் ரகுபர் தாஸ் போட்டியிடும் கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலும், நேற்று தேர்தல் நடந்ததால், பரபரப்பான சூழல் நிலவியது.பாராகோரா, சாய்பாசா ஆகிய தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், ஏராளமானோர், நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.

சிசாய் தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஓட்டுச் சாவடியில், ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அவர்களை கலைக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அந்த ஓட்டுச் சாவடியில், ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில், நக்சலைட்டுகள், ஒரு பஸ்சை தீ வைத்து எரித்ததால், பதற்றம் நிலவியது. மற்ற இடங்களில், பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி, ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது.

இதில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியான, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், காங்., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. ஐந்தாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், வரும், 20ல் நடக்கிறது. பதிவான ஓட்டுகள், வரும், 23ல் எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X