நம் நாடு சுதந்திரம் அடைந்தவுடன், நமக்கென அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 1950, ஜன., 26 முதல் அமலுக்கு வந்தது. அந்த அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவுக்கு, அம்பேத்கர் தலைமை வகித்தார்.
அந்த குழுவில், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ ராவ், டி.பி.கைதான், டி.எம்.மில்டர் மற்றும் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.அந்த குழுவில் இருந்தவர்களில் ஒருவர் கூட, எதிர்காலத்தில், நம் நாடு அரசியல்வாதிகள் என்ற, 'கிரிமினல்'களின் கையில் சிக்கி, குரங்கிடம் சிக்கிய பூ மாலை போல சீரழியும் என, கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல்வாதிகள் அனைவரும், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல், ராஜாஜி, காமராஜர், லால் பகதுார் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் மாதிரி தான் இருப்பர் என்ற எண்ணத்தில், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியோர் இருந்திருக்கலாம்.ஆனால், படிப்பறிவு சிறிதும் இல்லாத, கிரிமினல் குற்றங்கள் புரிந்தோர் நிறைந்த கூடாரமாக, அரசியல் மாறி விட்டது.
ஓட்டுரிமை உள்ள குடிமகன் ஒருவன் சிறையில் இருந்தால், தேர்தலில் அவனால் ஓட்டளிக்க இயலாது. ஆனால், சிறையில் இருந்தவாறே, அரசியல்வாதியால் தேர்தலிலும் போட்டியிட முடியும்.ஆனால், சாதாரண குடிமகன் மீது, போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டால், அதன் பிறகு, அரசு உத்தியோகத்தை கனவிலும் கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.ஆனால், ஓர் அரசியல்வாதி, பலமுறை சிறை சென்றிருந்தாலும், மந்திரி ஆகலாம்; முதல்வராகலாம். ஏன், பிரதமர், ஜனாதிபதியாகக் கூட ஆகலாம். எல்லாம் இந்த அரசியல் நிர்ணய சட்டம், அரசியல்வாதிகளுக்கு வழங்கியுள்ள சலுகை.இதற்கெல்லாம் காரணம், அரசியல் அமைப்புச் சட்டம் தான். 1950ல் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சட்டத்தை, எழுபது ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்; சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளோம்.அதற்குப் பதில், இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, இன்னும், 50 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடிய வகையில், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும்.அரசியல் அமைப்புச் சட்டம், அரசியல்வாதிகளுக்கு கொடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளே, நாட்டு மக்களின் பாதுகாப்பையும், வாழ்க்கையையும் தற்போது கேலிக்குரியதாக்கி, அன்றாடம் அவதிப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.பார்லிமென்ட் மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும், பொதுமக்களுக்கு, 'சேவை' புரிந்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 4,896. இவர்களில், குற்றப் பின்னணி கொண்டவர்கள், 1,581.
இவர்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடும் குற்ற வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்போர், 993.நம் தமிழகத்தில் மட்டும், 75 குற்றவாளிகளை, சட்டசபைக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து, அனுப்பி வைத்துள்ளோம். பக்கத்து மாநிலமான புதுச்சேரியில், 30 சட்டசபை உறுப்பினர்களில், 11 பேர் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளோர்.கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு, கட்சி பேதமில்லை. சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ் துவங்கி, நாட்டுப் பற்றை போதித்துக் கொண்டிருக்கும், பா.ஜ., மற்றும் உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லி, தாங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள் அடங்கலாக, எந்தக் கட்சியும் விதி விலக்கில்லை.குற்றப் பின்னணி அரசியல்வாதிகள் யாரும், தானே சென்று, பார்லிமென்டிலோ அல்லது சட்டசபையிலோ அமர்ந்து விடவில்லை; நாம் தான் ஓட்டுப் போட்டு, தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்துள்ளோம். அத்தகையோரிடம் நேர்மை, நாணயம், சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும்; அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பரா அல்லது நாட்டு மக்கள் பற்றி கவலைப்படுவரா?நம் அரசியல் சட்டமும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளும், மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களை மட்டுமே, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கிறது. இரண்டு ஆண்டுகளும், ௧௧ மாதங்களும் ஒருவர் தண்டனை பெற்றிருந்தால், தாராளமாக அவர் போட்டியிடலாம்; மக்கள், 'சேவை' ஆற்றலாம்.அரசியல்வாதிகள் மீது தொடரப்படும் ஊழல் வழக்குகள், அதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை கூர்ந்து கவனித்தால், ஒரு விஷயம் தெரிய வரும். சாதாரண, அரசியல் பின்னணி இல்லாத குற்றவாளிகளுக்கு, 12 ஆண்டுகள் முதல், 42 ஆண்டுகள் வரை, கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.ஆனால், எந்தக் கோர்ட்டும், ஊழல் குற்றத்தில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி போன்றோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏழாண்டுகள் வரை அவர்களுக்கு தண்டனை விதிக்க, சட்டத்தில் இடமிருந்தும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, நான்காண்டுகள் தான் தண்டனை வழங்கினார்.ஏழாண்டுகள் தண்டனை வழங்கி இருந்தால், உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டிருக்க மாட்டார்; அவரது உயிரும் பறி போயிருக்காது.சரி. இதற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா; குற்றப் பின்னணி அரசியல்வாதிகளின் நிர்வாகத்தில் இருந்து, நாடு விடுபடவே முடியாதா; முடியும்!அரசியல் என்பதை, கிரிமினல்கள், கனவு கூட காண முடியாத அளவுக்கு, அவர்களை அப்புறப் படுத்த முடியும். போலீஸ் ஸ்டேஷன்களில், கொடுக்கப்படும் ஒவ்வொரு புகாரையும், போலீசார் முறையாக பதிவு செய்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், பிரச்னை தீர்ந்தது.அதற்கு அடுத்தபடியாக, ஒரு நபர், தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து, 'இவர் மீது எந்த, எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை' என, காவல் அதிகாரிகள் சான்று அளிக்க வேண்டியதை, கட்டாயம் ஆக்க வேண்டும்.அது, சிவில் வழக்கோ, கிரிமினல் வழக்கோ, மோசடி வழக்கோ, திருட்டு, கொள்ளை வழக்கோ, எந்த வழக்குக்காக இருந்தாலும், அந்த நபர் மீது, போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப் பட்டிருப்பது தெரிந்தால், அவரது வேட்பு மனு, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து விட வேண்டும்.கையூட்டு பெற்றுக் கொண்டு, அந்த காவல் நிலைய ஆய்வாளர், பொய் சான்றிதழ் கொடுப்பாரேயானால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப் படுவார். ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அளிக்கப் படுவார் என, சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும்.அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் அளிக்கும் அங்கீகாரத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஓர் அரசியல் கட்சியை, அங்கீகரிக்க வேண்டுமெனில், அதற்கு சில நிபந்தனைகளை, தேர்தல் கமிஷன் வைத்துள்ளது. பதிவாகும் ஓட்டுகளில், ௬ சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும் என்பது, அந்த விதிகளில் முக்கியமானது.இந்த விதியே தவறு. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், கூட்டணி அமைத்து தான் போட்டியிடுகின்றன. தேர்தலின் போது, ஒரு வேட்பாளருக்கு, அவரின் சொந்த கட்சி, உறவினர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் ஓட்டளிப்பர்.நிலைமை இவ்வாறு இருக்கையில், கட்சிகளின் அங்கீகாரத்திற்கு, அந்த கட்சி வாங்கிய ஓட்டுகளை எப்படி துல்லியமாக கணக்கிட முடியும். பெற்ற ஓட்டுகள், அக்கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமில்லையே...ஆனால், இப்படித் தான் தேர்தல் கமிஷன், காலம் காலமாக, குத்துமதிப்பாக, கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. இம்முறை, மாற வேண்டும்.
மேலும், அரசியலில் இருந்து, கிரிமினல்களை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, முதலில், குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். அது இல்லாத வரை, இந்த நாடும் நிர்வாகமும் கிரிமினல்களிடம் சிக்கி, சீரழிந்து கொண்டு தான் இருக்கும்.இன்றைக்கு, நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பல இன்னல்களுக்கு, நம் நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, ராஜாஜி தான் காரணம். ராஜாஜியின் தொழிற்கல்வி திட்டத்தை, 'குலக்கல்வி' திட்டம் என்று திசை திருப்பி, வசைபாடி, எதிர்த்து நின்று, அவரை முதல்வர் பதவியிலிருந்தே ராஜினாமா செய்ய வைத்தன, சில அரசியல் கட்சிகள்.ஆனால், 1967 தமிழக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை எதிர்க்க, அவர் கூட்டணி அமைத்தார். அப்போது அவர் அமைத்த கூட்டணி தான், தமிழகத்தை அதன் பிறகு தொற்றிக் கொண்டது.கூட்டணி என்பதையே, ஆட்சியில் அமர்வதற்கான தங்கள் கொள்கையாகவே, பெரிய கட்சிகள் மாற்றிக் கொண்டு விட்டன; அதை வைத்து, அரசியல் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன் சண்டைக் கோழிகளாக விளங்கும் கட்சிகள், தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து, கூட்டணி அமைத்து, சண்டையை மறந்து, மக்களின் ஓட்டுகளை பறிக்கின்றன.எந்த காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட, ராஜாஜி, கூட்டணி அமைத்தாரோ, அந்த காங்கிரஸ் கட்சியே, தற்போது, ஏனைய துண்டு துக்கடா கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்துக் கொண்டிருப்பது தான், உச்ச கட்ட கொடுமை.எனவே, இந்திய அரசியலில் முதலில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவது தான். அந்த காலத்தில் இல்லாத பல குற்றங்கள், முறைகேடுகள், மோசடிகள், அத்துமீறல்கள் இப்போது நடக்கின்றன. அவற்றிற்கு, அந்த காலத்தில் எழுதப்பட்ட தண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.எனவே, தண்டனைச் சட்டங்கள் உட்பட, அனைத்து சட்டங்களையும், புதிதாக எழுத வேண்டும்.
இதற்காக, அனைத்து தரப்பினரும் அடங்கிய ஒரு குழுவை, மத்திய அரசு நியமிக்க வேண்டும். அதுபோல, தேர்தல் விதிகளிலும் மாற்றங்கள் அவசியம்.இந்த இரண்டும் நடந்து விட்டால், நம் நாட்டில் எதிர்காலத்தில் குற்றங்கள் மறைந்து விடும்; குற்றவாளிகள் குறைந்து விடுவர்; சொர்க்க பூமியாக திகழும்!
எஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்
தொடர்புக்கு:
இ--மெயில்: essorres@gmail.com