நலமுடன் வாழ நூல்கள் 50 - சாதனை பயணத்தில் மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன்

Added : டிச 08, 2019
Share
Advertisement
பிரபலமான டாக்டர்கள் பலர் தமிழில் புத்தகம் எழுதுவது அபூர்வம். ஆங்கிலத்தில் மருத்துவ மாணவர்களுக்காக அவர்கள் எழுதும் புத்தகங்கள் சாதாரண மக்களுக்கு உதவாது. மருத்துவ உலகின் அற்புதங்களை சாதாரண மக்களும் அறிந்து, விழிப்புணர்வு பெற்று, நோய் வருமுன் காத்துக்கொள்ள வழிகாட்டும் புத்தகங்கள் இன்றைய சமூகத்திற்கு தேவை. அந்த பணியை மிக நேர்த்தியாக செய்து, படித்தவர்களுக்கும்
நலமுடன் வாழ நூல்கள் 50 - சாதனை பயணத்தில் மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன்

பிரபலமான டாக்டர்கள் பலர் தமிழில் புத்தகம் எழுதுவது அபூர்வம். ஆங்கிலத்தில் மருத்துவ மாணவர்களுக்காக அவர்கள் எழுதும் புத்தகங்கள் சாதாரண மக்களுக்கு உதவாது. மருத்துவ உலகின் அற்புதங்களை சாதாரண மக்களும் அறிந்து, விழிப்புணர்வு பெற்று, நோய் வருமுன் காத்துக்கொள்ள வழிகாட்டும் புத்தகங்கள் இன்றைய சமூகத்திற்கு தேவை. அந்த பணியை மிக நேர்த்தியாக செய்து, படித்தவர்களுக்கும் எட்டாத மருத்துவ அதிசயங்களை, பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய தமிழில் தந்து இதுவரை 50 புத்தகங்களை எழுதியுள்ளார் டாக்டர் கு.கணேசன்.

தினமலர் நாளிதழ் என்பார்வை பகுதியில் கட்டுரைகள் எழுதிவருகிறார். தாமரை பிரதர்ஸ் மீடியா லிட்., சார்பில் வெளியான இவரது 'நலமுடன் வாழ' என்ற நுால் பெரும் வரவேற்பை பெற்றது.ராஜபாளையத்தை சேர்ந்த இவருக்கு அண்மையில் 'அழ. வள்ளியப்பா இலக்கிய விருது' வழங்கப்பட்டது. மத்திய அரசின் உயரிய விருதான 'தேசிய அறிவியல் விருது', தமிழக அரசின் விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது பேட்டி...

* ஒரு டாக்டர் எழுத்தாளர் ஆனது எப்படி? நான் பிறந்து வளர்ந்த விருதுநகர் மாவட்டம் புதுச் செந்நெல்குளம். கிராம நுாலகம்தான் என்னை எழுத்தாளர் ஆக்கியது. புத்தகங்களைப் படிக்கப் படிக்க எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் சகோதரி ராமலட்சுமி நான் கதைகள் எழுதுவதை ஊக்கப்படுத்தினார். வரலாற்று ஆசிரியர் அழ. கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது முதல் படைப்பு 'முயல்' என்ற சிறுவர் பத்திரிகையில் வெளியானது. பிறகு கோகுலம் உட்பட சிறுவர் இதழ்களில் கவிதை, கட்டுரைகளை சிறுவர்களுக்கு எழுதினேன்.

* குழந்தைகளுக்கான எழுத்தாளராக இருந்த நீங்கள் எப்படி மருத்துவ எழுத்தாளர் ஆனீர்கள்?சிறுவர் இதழ்களில் எழுதுவதோடு, என் வயதிற்கேற்ப காதல் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வார இதழ்களுக்கு அனுப்பினேன். அவை வெளியாகின. பின்னர் டாக்டராகி ராஜபாளையத்துக்கு வந்தேன். எழுத்தாளர் கொ.மா.கோதண்டமும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா மணிமலர் மன்றத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த மன்றத்துக்கு வரும் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி கொடுத்து வானொலி நாடகங்களை நான் எழுதி இயக்கினேன். அப்போதும் மருத்துவக் கட்டுரைகளை எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டதில்லை. அது 1984ம் ஆண்டு. 'கோகுலம்' பத்திரிகையின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ராஜபாளையத்திற்கு வந்திருந்தார். அவரை மானசீக குருவாக நேசிப்பவன் என்ற முறையில், கவிஞரை என் வீட்டுக்கு அழைத்தேன். அப்போது நான் எழுதியிருந்த சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை காண்பித்தேன்.

அப்போது அவர் சொன்னார்: “டாக்டர், இந்த மாதிரி கதைகள் எழுத தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் காப்பது பற்றியும், நோய்களைப் பற்றியும், நோய்த்தடுப்பு பற்றியும் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுவதற்கு டாக்டர்கள் இல்லை. இன்றைய தேவை அதுதான். நீங்கள் இனிமேல் கோகுலத்தில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுங்கள்” என்றார். அதுவரை மருத்துவக் கட்டுரை எழுதிப் பழக்கமில்லாத எனக்கு எடுத்த உடனேயே தொடர் எழுத வாய்ப்புத் தருகிறேன் என்று கவிஞர் கூறியது நான் பெற்ற பேறு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ தொடர் 29 ஆண்டுகள் வெளிவந்தது. ஒரு எழுத்தாளர் ஒரு குழந்தைப் பத்திரிகையில் தொடர்ந்து 29 ஆண்டுகள் எழுதியது என்பது சாதனை. அதற்காகத்தான் எனக்கு சமீபத்தில் 'அழ. வள்ளியப்பா இலக்கிய விருது' கொடுத்திருக்கிறார்கள்.இந்த மருத்துவ கட்டுரைகள் வரவேற்பை பெற்ற காரணத்தால் தொடர்ந்து பெரியவர்களுக்காக மருத்துவ கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.

* டாக்டராகவும் இருந்து கொண்டு எப்படி எழுத முடிகிறது?நான் மருத்துவ நுால்களை எழுத ஆரம்பித்த பிறகுதான் அவற்றின் தேவை இருப்பது புரிந்தது. மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு தர வேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறந்தது. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் புதிதாக படிக்கும் வழக்கம் எனக்கு இருக்கிறது. அப்படிப் படித்ததை எழுத வேண்டும் என்ற வேட்கை வந்துவிடுகிறது. வாசகர்களும் நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெற்றதாக கூறுகிறார்கள். வீட்டில் என் மனைவி மற்றும் மகன், மகள், மருமகள் (மூவருமே டாக்டர்கள்) எழுதுவதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்.
இதனால் தினமும் காலையில் 2 மணி நேரம் எழுதுவதற்காக ஒதுக்கிவிடுகிறேன். நான் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுள் நுழைவதில்லை என்பதால் நேரம் கிடைக்கிறது.

* நீங்கள் எழுத விரும்பும் கனவுப்புத்தகம்?சித்தர்கள் வாழ்ந்து சித்த மருத்துவம் வேரூன்றிய தேசம் இது. இங்கு ஆங்கில மருத்துவம் எப்போது, எப்படி தோன்றி வளர்ந்தது என்ற வரலாற்றை தமிழில் எழுத வேண்டும் என்ற கனவு உள்ளது. இவ்வாறு கூறினார்.வாழ்த்த : gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X