சின்னத்திரை தொடரில் 'லேடீஸ் கெட்டப்'பிற்கு ஏற்பட்ட வரவேற்பு புது உத்வேகத்தை அளித்தது என்கிறார் சென்னையைச்சேர்ந்த நடிகர் விதுஷ் சவுத்ரி.
அவ்வை சண்முகியில் கமல், சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, 'ரெமோ'வில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். அதே பாணியில் சின்னத்திரையில் ஓவியா தொடரில் வெற்றி என்ற பெயரில் கார் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விதுஷ் சவுத்ரி. இவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக நடிக்கிறார்.
தாத்தா பி.பி. ராய்சவுத்திரி 120 படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர். தந்தை ராஜ்ஸ்ரீதர் கடைக்கண்பார்வை, புல் ஆனாலும் பொஞ்ஜாதி போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார். கண்ணே கலைமானே, ஏஞ்சலினா படங்களில் விதுஷ் சவுத்ரி நடித்தார். ஆரோக்கியராஜ் இயக்கத்தில் மின்மினி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வெளி வர உள்ள 'ஹீரோ' படத்திலும் நடித்துள்ளார். 'டிவி' சீரியல் தொடர் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெண்கள் மத்தியில் ஓவியா தொடரில், இவரின் எதார்த்தமான, காமெடி பேச்சும் துடுக்கான நடிப்பும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. 'ஸ்மார்ட்' இளைஞரான இவர் சின்ன திரை கதையில் தங்கை காதலுக்கு உதவுவதற்காக கதாநாயகனை பார்க்க மருத்துவமனையில் 'நர்ஸ்' கெட்- அப்'பில் ஐந்து நாட்கள் நடித்து கவர்ந்துள்ளார். பார்ப்பவர்கள் 'யார் இவள்'என விசாரிக்கும் அளவிற்கு இளம் சிட்டாக தத்ரூமாக நடித்தார். இதற்கு ஏகபோக வரவேற்பு.
விதுஷ் சவுத்ரி கூறுகையில்,'' திறமையை நிரூபிக்க எந்த வேடமானாலும் நடிப்பதில் தவறு இல்லை. சினிமாவில் தேர்ச்சி பெற சின்ன திரை 'ஹோம் ஒர்க்' எனக் கருதி எனது திறமைகளை வெளிப்படுத்தி நடிக்கிறேன். சினிமாவில் கால்பதிக்க இதுபோன்ற வேடங்கள் உதவும். நர்ஸ் வேடத்திற்காக தினமும் 3 மணிநேரம் மேக்கப் நடக்கும். சிரமமாக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தில் உள்ளது போல் என பலரும் பாராட்டுவது மன நிறைவை தருகிறது, என்றார்.
இவரை வாழ்த்த : sathishr.fx@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE