முக்கிய பிரமுகர் ஒருவருக்காக காலை முதல் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் போலீசுக்கு 'அவசரம்' என்றால் என்ன செய்வார் என்பதையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் சமீபத்தில் வெளியான 'மிக மிக அவசரம்' சினிமா விளக்கியது. பலரது பாராட்டுக்களையும் குவித்தது. இதை 'வி ஹவுஸ்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியும் இருந்தார். வளரும் தயாரிப்பாளர்களில் ஒருவர். இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி. தந்தை முன்னாள் ராணுவ வீரர். சிறுவயது முதலே சினிமா மீது ஈர்ப்பு உண்டு. பங்கஜ் புரோடக் ஷனில் தயாரிப்பு உதவியாளராக பல சினிமாக்களில் பணிபுரிந்துள்ளேன். இயக்குனர் மணிவண்ணனின் 'அமைதிப்படை 2' வை தயாரிக்க 'வி ஹவுஸ் புரோடக் ஷன்' நிறுவனத்தை துவக்கினேன். 'மிருகம்' பட இயக்குனர் சாமியின் அடுத்த படமான 'கங்காரு' படத்தை தயாரித்திருக்கிறேன். நீண்ட காலமாக படம் இயக்கவும், பொழுதுபோக்கு கலந்து ஏதாவது நல்ல விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. யாரும் எடுக்காத கருத்தியலை கையில் எடுத்து சினிமாவாக வழங்க ஆசைப்பட்டேன்.
பல பெண் போலீசாரை கடந்து சென்றிருப்போம். காக்கி அணிந்திருப்பதால் அந்நியமாக உணர்ந்திருப்போம். அவர்களது வலிகளை சொல்ல விரும்பினேன். அதில் உருவான கதைதான் 'மிக மிக அவசரம்'. தமிழ் சினிமாவில் இதுவரை மிடுக்கான போலீஸ் படம் தான் வந்துள்ளது. ஆனால் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளை பேசவில்லை.
தியேட்டர் உரிமையாளர்கள் 'மிக மிக அவசரம்' படத்திற்கு பகல் காட்சி மட்டுமே ஒதுக்கினர். இது எனது படத்திற்கு மட்டுமல்ல பெரும்பாலான சிறிய பட்ஜெட் படங்களுக்கு இதை தான் செய்கின்றனர். இதனால் சிறிய படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. ஆனால் மிக மிக அவசரம் தோல்வி அடையவில்லை. ஆனால் வெற்றி தடுக்கப்பட்டது. நடிகர்களை நம்புபவர்கள் கதையை நம்ப மறுக்கின்றனர்.
சிம்புவின் மாநாடு படத்தை தயாரிக்கிறேன். புது தயாரிப்பாளர்களுக்கு கூற விரும்புவது இயக்குனர் கூறுவதை நம்பி பணம் கொடுத்து கொண்டே இருந்தால் தோல்வியை சந்திக்க நேரிடும். சினிமாவும் ஆரோக்கியமற்று போய்விடும். ஒரு தயாரிப்பாளருக்கு கதையின் தன்மையும், லாப நோக்கத்தையும் கணிக்க தெரிய வேண்டும். கதையை தேர்வு செய்து காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றிட வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE