அள்ளுற வேலைக்கு தள்ளு... ஆளுங்கட்சி வாரிசு லொள்ளு!| Dinamalar

'அள்ளுற' வேலைக்கு தள்ளு... ஆளுங்கட்சி வாரிசு லொள்ளு!

Added : டிச 10, 2019
Share
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை அறிந்துகொள்வதற்காக சித்ராவும், மித்ராவும், கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர். அங்கு, 'மூன்றாவது மாடியில் உள்ளாட்சி தேர்தல் அலுவலகம் செயல்படுகிறது' என, போர்டு வைக்கப்பட்டிருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா, ஆச்சரியமா இருக்கு. ஒவ்வொரு ஆபீசும் எந்த தளத்துல இருக்குன்னு போர்டு வச்சிருக்காங்க,'' என, பூரிப்புடன்
 'அள்ளுற' வேலைக்கு தள்ளு... ஆளுங்கட்சி வாரிசு லொள்ளு!

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை அறிந்துகொள்வதற்காக சித்ராவும், மித்ராவும், கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர். அங்கு, 'மூன்றாவது மாடியில் உள்ளாட்சி தேர்தல் அலுவலகம் செயல்படுகிறது' என, போர்டு வைக்கப்பட்டிருந்தது.
அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா, ஆச்சரியமா இருக்கு. ஒவ்வொரு ஆபீசும் எந்த தளத்துல இருக்குன்னு போர்டு வச்சிருக்காங்க,'' என, பூரிப்புடன் கேட்டாள்.''அதில்லக்கா, தரைத்தளத்துல பொது தேர்தல் பிரிவு இருக்கு; மூன்றாவது தளத்துல உள்ளாட்சி தேர்தல் பிரிவு செயல்படுது. எலக் ஷன் சம்பந்தமா விசாரிக்க வர்றவங்க, பொது தேர்தல் பிரிவுக்கு வர்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல முடியலை. 'எங்கள விடுங்க சாமி'ங்கற ரீதியில, போர்டு எழுதி வச்சிட்டாங்க,''''அரசாங்க தரப்புல எலக் ஷன் நடத்துறதுல வேகமாக இருக்காங்க போலிருக்கு. தி.மு.க., தரப்புல இன்னமும் கோர்ட் படியேறிக்கிட்டே இருக்காங்களே,'' என, நோண்டினாள் சித்ரா.''ஆமாக்கா, எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு, தி.மு.க.,காரங்க வேலை செய்றாங்க.
இவ்ளோ நாளும் இட ஒதுக்கீடு சரியா பண்ணலைன்னு சொன்னாங்க. இப்போ, 1991 மக்கள் தொகையை அடிப்படையா வச்சு, வார்டுகளை மறுவரையறை செய்யணும்னு, புதுசா கெளப்பி விட்டுருக்காங்க...''''ஏன், அவுங்களுக்கு தேர்தலை சந்திக்க இஷ்டம் இல்லையா,''''வர்ற, 2021ல் சட்டசபை தேர்தல் நடக்கப் போகுது. அப்ப, ரஜினி, கமல் அரசியல் களத்துல இருந்தாலும், தி.மு.க.,வே ஆட்சிக்கு வரும்னு, ஏஜன்சி நடத்துன ஆய்வறிக்கையில சொல்லியிருக்காங்க.
அதை நம்புறதுனால, அரியணை ஏறுனதுக்கு அப்புறம் உள்ளாட்சி தேர்தல் நடத்துனா, ஒட்டு மொத்த நிர்வாகமும் கைக்குள் இருக்கும்னு நெனைக்கிறாங்களாம். இப்ப, அ.தி.மு.க.,வுக்கே சாதகமா நிலைமை இருக்கிறதுனால, முட்டுக்கட்டை போட்டுக்கிட்டே இருக்காங்க,''''ஆனா, நம்மூர்ல, ஆளுங்கட்சிக்காரங்களோடு தி.மு.க.,காரங்க நெருக்கமா இருக்காங்களே...''''நீங்க சொல்றதும் உண்மைதான்.
தி.மு.க., நிர்வாகி ஒருத்தரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை ரகசியமா சந்திச்சு, தனது மகளுக்கு அரசு வேலை போட்டுக் கொடுக்கணும்னு மனு கொடுத்திருக்காரு.நம்பி வந்துட்டாரேன்னு, உயரதிகாரிகளிடம் பேசி, சென்னையில மீன்வளத்துறை டிபார்ட்மென்ட்டுல இளநிலை உதவியாளர் பதவி வாங்கிக் கொடுத்திருக்கிறாரு. இப்போ, கோவைக்கு 'டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுத்ததோடு, வேலையை நிரந்தரமாக்கி இருக்காங்க.
''இந்த மாதிரி, தி.மு.க.,காரங்களும் ஏதோ ஒரு வழியில ஆதாயம் தேடிக்கிட்டு இருக்கிறதுனால, நம்மூர்ல எதிர்க்கட்சிக்காரங்க ரொம்பவே பலவீனமா இருக்காங்க. வசதி வாய்ப்போடு இருக்கறதுனால, ஆளுங்கட்சிக்கு எதிரா எந்த வேலையும் செய்றதில்லை. இது தெரிஞ்சு தான், மாவட்ட செயலாளர் கூட்டத்துல, தி.மு. க., தலைவர் ஸ்டாலின் பொங்கியிருக்காரு,''''அதெல்லாம் சரி... தேர்தல் நடத்துவாங்களா... மாட்டாங்களா... அதைச் சொல்லுப்பா,''''அக்கா, கண்டிப்பா நடத்துவாங்க. எந்த 'ரூட்'டுல வழக்கு போட்டாலும், பதில் மனு தாக்கல் செய்ய, அரசு தரப்புல தயாரா இருக்காங்க,''கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இருவரும், அருகில் இருந்த பேக்கரிக்கு சென்றனர்.
அப்பகுதியில் இருந்த குப்பை தொட்டியை பார்த்ததும், ''கார்ப்பரேஷன்ல புதுசா துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க, ஐகோர்ட் 'ஸ்டே' கொடுத்திருக்காமே...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''உள்ளாட்சி தேர்தலுக்குள்ள துப்புரவு தொழிலாளர்களை நியமிக்கறதுக்கு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ்க்கு உத்தரவு வந்திருக்கு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு சொல்லி, கம்யூ., கட்சிக்காரங்க தடை வாங்கியிருக்காங்க. இவுங்களுக்கு பதில் சொல்லிட்டு, புதுசா ஆள் எடுங்கன்னு, ஐகோர்ட் சொல்லியிருக்கு. என்ன பதில் சொன்னாலும், மறுபடியும் கோர்ட் படியேற, எதிர்க்கட்சிக்காரங்க தயாரா இருக்காங்க...''''போஸ்டிங் வாங்கித் தர்றதா சொல்லி, நிறைய பேரிடம் லட்சக்கணக்குல பணம் வாங்குனதா சொல்றாங்களே, உண்மையா,''''ஆமாக்கா, கொஞ்ச நாளா, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் ஆட்டம் தாங்க முடியலை. எம்.எல்.ஏ., ஆபீசுக்கு போனாலும், முதல்ல வாரிசை பார்க்கணும். அவரு, 'ஓகே' சொன்னாதான், எம்.எல்.ஏ.,வை பார்க்க முடியுமாம். இப்ப தலா ரெண்டு, மூணு லட்சம் ரூபா வரைக்கும் வாங்கியிருக்காங்களாம். நுாத்துக்கும் மேற்பட்டவங்க கொடுத்திருக்கறதா சொல்றாங்க. இப்ப, தடை விதிச்சிருக்கறதா தகவல் வெளியானதும், பணத்தை திருப்பி கேட்டுட்டு இருக்காங்களாம்,''''ஏம்ப்பா... உள்ளாட்சி தேர்தல் நடத்துற நேரத்துல, இது வேறயா, கட்சிக்கு கெட்டப் பெயர் தானே வரும்...''''நீங்க... அப்படி நெனைக்கிறீங்க. அவுங்க நெனைக்கலையே. எவ்ளோ சம்பாதிக்க முடியுமோ, அவ்ளோ வாரி சுருட்டுறதுக்கு முயற்சிக்கிறாங்க,''டீ குடித்து விட்டு இருவரும் வெளியே வந்தபோது, கிழக்கு மண்டல கார்ப்பரேஷன் ஜீப் கடந்து சென்றது.
''என்ன மித்து, கிழக்கு மண்டலத்துல, கரன்சி இல்லாம, 'பைல்' மூவ் ஆகாதாமே...''''ஆமாக்கா, எந்த பைல் ஆபீசர் டேபிளுக்கு போகணும்னு, முடிவு செய்றதுக்கு ஒருத்தர் இருக்காராம். அவரை பார்த்து, கேக்குற தொகையை கொடுத்தாதான், ஆபீசர் கவனத்துக்கே பைல் போகுமாம். அப்ரூவல் சம்பந்தமானதா இருந்தா, குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் கேக்குறாங்களாம். மண்டலம் முழுக்க, 20 வார்டுகள்ல இருந்து எவ்ளோ அப்ளிகேசன் வரும்; எவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு, நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கோங்க,'' என்ற மித்ராவுக்கு, 'குமார்' என்பவரிடம் இருந்து, மொபைல் போன் அழைப்பு வந்தது. சிறிது நேரம் கழித்து பேசுவதாக கூறி, இணைப்பை துண்டித்தாள்.பேக்கரியில் இருந்து செஞ்சிலுவை சங்க அலுவலகத்தை நோக்கி, இருவரும் நடக்க ஆரம்பித்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் ஜீப் ஒன்று சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''நம்மூர்ல இருக்கிற போலீஸ் உயரதிகாரி ஒருத்தரின் ஒய்புக்கு பணிவிடை செய்றதுக்காகவே, அதிகாரிகள் நியமிச்சிருக்காங்களாமே...''''இந்த விஷயம் ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... அதுக்காக ஒரு இன்ஸ்பெக்டர நியமிச்சிருக்காங்களாம். 'பியூட்டி பார்லர்' போனாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிங்க ஏற்பாடு செஞ்சு செலவு செய்யணுமாம். மகனுக்கு 'கட்டிங்' செய்றதுக்கு பங்களாவுக்கே ஆள் கூட்டிட்டு வரணுமாம். போலீஸ் அதிகாரிங்க ரொம்பவே புலம்புறாங்க. கேக்குறதுக்கே பாவமா இருக்கு,''''போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்காக ரெண்டு தடவை அபராதம் வசூலிக்கிறாங்களாமே, உண்மையா,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆமாக்கா, சிக்னல் பக்கத்துல நிக்கிற போலீஸ்காரங்க, விதிமீறும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, 'ஸ்பாட் பைன்' வசூலிக்கிறாங்க.
அதை கடந்து போனா, இன்னொரு சிக்னல்ல இருக்கிற போலீஸ்காரரு, போட்டோ எடுத்து, போலீஸ் செயலியில 'அப்டேட்' பண்ணிடுறாரு. கம்ப்யூட்டர் மயமாகி இருக்கிறதுனால, அபராதம் கட்டச் சொல்லி, மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வருது; வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் வருது. ஒரே குற்றத்துக்கு ரெண்டு தடவை அபராதம் கட்டணுமான்னு, வாகன ஓட்டிகள் புலம்புறாங்க. உயரதிகாரிங்க கவனத்துக்கு கொண்டு போயும் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,''''வி.ஏ.ஓ., ஆபீசுல கோலாச்சிக்கிட்டு இருந்தவரை, வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாமே,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள்.''விளாங்குறிச்சி வி.ஏ.ஓ., ஆபீசுல இருந்தவரு தான், 'ஆக்டிங்' வி.ஏ.ஓ., மாதிரி செயல்பட்டுட்டு இருந்தாரு. கரன்சி இல்லாம சர்ட்டிபிகேட் கொடுக்கறதில்ல. இதைப்பத்தி, நாம ரெண்டு பேரும் ஏற்கனவே பேசியிருக்கோம். அதை கேள்விப்பட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, செம 'டோஸ்' கொடுத்திருக்காரு. ஒடனே, 'குட்டி' அதிகாரியா செயல்பட்டவரை, வெரட்டிட்டாங்களாம்,''''டாஸ்மாக் துறையில, நம்ம மண்டலத்துல இருக்கிற, 'லேடி' அதிகாரிக்கு, கருமத்தம்பட்டியை சேர்ந்த ஆளுங்கட்சி புள்ளி சகல வசதியும் செஞ்சு கொடுக்கிறாராம்.
இவரோட 'ஆசி' இருந்தாதான், 'சில்லிங்' விற்பனை, தாபா ஓட்டல் நடத்த முடியுமாம்.புறநகர்ல ஏகப்பட்ட இடங்கள்ல இவரும் நடத்திக்கிட்டு இருக்காராம். மாசம் தவறாம அதிகாரிக்கு, 'கப்பம்' போயிடுதாம்,'' என்றபடி, மொபைல் போனில், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் கேட்டுக் கொண்டே நடக்க ஆரமபித்தாள் மித்ரா.அவளை பின்தொடர்ந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X