தவம் போல் சமையல்

Added : டிச 10, 2019
Advertisement
மனிதகுலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். அக்காலத்தே பத்துக்கும் மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர்.“உணாவே வல்சி உண்டி ஓதனம்அசனம் பகதம் இரை ஆசாரம்உறை ஊட்டம்” என பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகிறது.இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே
 தவம் போல் சமையல்

மனிதகுலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். அக்காலத்தே பத்துக்கும் மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர்.

“உணாவே வல்சி உண்டி ஓதனம்அசனம் பகதம் இரை ஆசாரம்உறை ஊட்டம்” என பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகிறது.இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நுால் எழுதப்பட்டிருக்கின்றது என்ற செய்தி அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகிறது. ஆனால் அவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் பாரதி.


வீணாகும் உணவு
உணவு பற்றாக்குறை என்ற அளவிலிருந்து நகர்ந்து உணவை வீணடிக்கும் செயல்களில் நாம் தற்போது இறங்கிவிட்டோம். திருமண மண்டபங்கள், விடுதிகளில் வீணாவது போக நம் நாட்டில் நடுத்தர குடும்பத்தினர் மட்டுமே ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.எந்த செயலுக்குமே திட்டமிடல் மிக அவசியம். அது சமையலுக்கும் பொருந்தும். என்ன சமைக்க போகிறோம் என சரியாக முந்தைய தினமே திட்டமிட்டுக்கொண்டால் அதற்கேற்ற உணவுப் பொருள்களை தயார்படுத்திக் கொள்வதோடு நேரத்தையும் உணவு பொருள்களின் தேவையையும் சரிவர பயன்படுத்திக் கொள்ளலாம்.


நல்ல மனம்

ஒரு கதை உண்டு. அரண்மனையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் மன்னனுக்கு உணவு தயார் செய்தார். சில தினங்களாக மன்னருக்கு எதிர்மறை எண்ணங்களாக மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. இதைப்பற்றி தன் மந்திரியிடம் மன்னர் தெரிவிக்க அவர் பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மன்னருக்கு சமீபமாக உணவை தயார் செய்யும் சமையல்காரனை கூர்ந்தாய்வு செய்தார். அவன் அதற்கு முன் திருடனாக இருந்ததும் இன்னமும் அவனிடம் அந்த கள்ள எண்ணம் நீடித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

கெடுதல் எண்ணத்துடன் தயார் செய்த உணவை உண்டதனாலேயே மன்னனுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றியதாக உணர்ந்த மந்திரி உடனே அவனை பணியிலிருந்து நீக்கி மன்னரைக் காத்தார். நல்ல மனதுடன் தயார் செய்யும் உணவை உட்கொள்வதே சாலச் சிறந்தது. நம் இல்லங்களில் நம் ஒவ்வொருவருக்காகவும் பார்த்து, பார்த்து சமையல் செய்யும் அம்மா அன்பையும் சரிவிகிதத்தில் கலப்பதால் நம் வயிறும் மனமும் 100% நிறைவடைகிறது.


கொடுத்து வைத்தவர்கள்
நமக்காக அன்புடன் அக்கறையுடன் சமையல் செய்து உணவை பரிமாறும் அம்மா, மனைவி, அக்கா, தங்கை, கணவனை வாய்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவ்வளவு ஏன்? தினமும் மந்திர உச்சரிப்புடன் சமையல் செய்யும் தோழியை எனக்குத் தெரியும். இந்த மந்திர உச்சரிப்பினால் உண்பவர்களின் மனம் அமைதிபடும் என்று காரணம் சொன்னாள். ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் சில வீடுகளில் சமையல் செய்வதை பார்க்கும் போதே நம் வயிற்றில் புளியைக் கரைக்கும். கிரிக்கெட் விளையாட்டில் ரன் எடுக்க வீரர்களுக்கிடையே ஓடுவது போன்ற அதிவேக ஓட்டத்துடன் அலைபேசியில் யாருடனோ உக்கிரமாக சண்டையிட்டுக் கொண்டே கைக்கு கிடைத்ததையெல்லாம் அள்ளிப் போட்டு கிளறும் அவதிகளை பார்க்க நமக்கு இதய பலம் அவசியம்!


சமையல் சலிப்பா
இன்று தன் குடும்பத்திற்காக சமையல் செய்வதை பெரும் சலிப்புடன் எதிர்கொண்டு முகம் சுழிக்கும் யுவதிகள் பெருகிவிட்டனர். கூட்டுக் குடும்பமாக வசிக்கும் என் உறவினர் வீடு அது. அவர்களின் மூன்று மருமகப் பெண்களில் இருவர் வேலைக்குச் செல்லும் பெண்கள். ஒருவர் மட்டும் இல்லத்தரசி. 'தான் சமையல் செய்வதற்கு மட்டுமே லாயக்கான பெண்' என்பது போல ஒரு அசாதாரண உணர்வு அவரின் மனதில் புரையோடிப் போயிருந்தது. தன் இயலாமை நிலையை அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்தார்.

இதை உணர்ந்த குடும்பத்தினர் அவரின் இந்த உயரிய பணியால் தான் தாங்கள் ஆரோக்கியமாக, உணவு குறித்த கவலையின்றி பயணிக்க முடிகிறது என்பதைச் சொல்லிப் புரிய வைத்தனர். ஆராய்ந்துப் பார்த்தால் இம்மனநிலை நிறைய பெண்களிடம் தற்போது உள்ளது. அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணமிது. ஏனெனில் உணவு நம் அனைவருக்கும் அத்தியாவசியமானது.சமையல் செய்வதை நினைத்து எந்த வருத்தமும் அடையத் தேவையில்லை. சமையல் செய்வதும் வீணையில் நல்ல இசையை மீட்டுவது போல்தான். உணவு நம் உடலையும் இசை நம் உள்ளத்தையும் ஆனந்தப்படுத்துகிறது அல்லவா!


சமையலறையை பார்த்து
நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத, உணவு உற்பத்தியாகும் இடமான நம் வீட்டின் சமையலறை தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடம். சமையலறை சுத்தமாக இருந்தாலே மனம் ஒரு நல்ல நிலையில் பிரவாகிக்கும். குப்பையும் கூளமுமாக நேற்றைய கழிவுகளில் அங்காங்கே கொசு மொய்த்துக் கொண்டு இருந்தால் அந்த இடம் சார்ந்த வெறுப்பு சமையலிலும் பிரதிபலிக்கும். வீட்டு சமையலறையின் தெய்வாம்சத் தன்மையை பொருத்தே ஒரு வீட்டில் பெண் எடுக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வார்களாம்பழங்காலத்தில்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். துாய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக வைக்க உதவும். சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்தினர். 'கலாசாரத்தையும் விருந்தோம்பலையும் கொண்ட மாபெரும் நாடான தமிழகத்துக்கு வருவது பெருமையளிக்கிறது' எனச் சுட்டியிருந்தார் மோடி. சீன அதிபர் இரவு விருந்தில் சாம்பாரை ருசித்து சாப்பிட்டார் என்பதெல்லாம் தலைப்புச் செய்தி. நமது கலாசாரத்தையும் விருந்தோம்பலையும் உணவின் மூலம் மேன்மையான இடத்தில் நிலை நிறுத்த முடியும் என்பதற்கு இதெல்லாம் சாட்சி தானே?

எந்த துறைக்கும் ஆர்வம் முக்கியம். ஆர்வம் இல்லையெனில் எந்தத்தேடலும் இல்லை, சிந்தனையும் இல்லை. சமையலுக்கும் இது பொருந்தும். சமையலில் கூட புதுப்புது சிந்தனைகள், சேர்க்கைகள் புதுப்புது சுவையை நமக்கு பரிசளிக்கும். இதற்குத் தேவை கொஞ்சம் ஆர்வமும் முனைப்பும்.நாம் சத்தான உணவை உண்கிறோம் என்ற உணர்வே, நம்மை பலமாக எண்ண வைக்கும். சிறந்த உணவை ருசித்து மகிழ்ந்துண்டு நலமுடன் வாழ்வோம்.

- பவித்ரா நந்தகுமார்

எழுத்தாளர், ஆரணி

94423 78043

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X