குடியுரிமை மசோதாவுக்கு பாக்., எதிர்ப்பு| Dinamalar

குடியுரிமை மசோதாவுக்கு பாக்., எதிர்ப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (19)
amendment_bill,amendment,pakistan,amitshah,பாகிஸ்தான்,parliment,எதிர்ப்பு

இஸ்லாமாபாத் : 'குடியுரிமை சட்ட திருத்த மசோதா, அண்டை நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் மோசமான எண்ணத்தோடு, கொண்டு வரப்பட்டுள்ளது' என, பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்க வழி செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. 'இந்த மசோதா, 130 கோடி இந்தியர்களின் ஆதரவு பெற்றது. இதனால், அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், சட்டவிரோதமாக ஊடுருவியோருக்கு, இந்த மசோதா எதிரானது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, பாக்., வெளியுறவுத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா, பாரபட்சமானது. பிற்போக்குதனமானது. அனைத்து சர்வதேச சட்ட விதிகளையும் மீறுகிறது. அண்டை நாடுகளின் விவகாரங்களில், இந்தியா தலையிடும் மோசமான எண்ணத்துடன் கொண்டுவரப்பட்டது.தங்கள் நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து, இந்தியா - பாக்., இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை, இந்தியா மீறியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அமித் ஷாவுக்கு தடை?


குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்தியாவின் மதசார்பற்ற பன்முகத்தன்மைக்கும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கும் இழுக்காக அமைந்துள்ளது.இந்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. இது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதன்மை தலைவர்கள் மீது, அமெரிக்க அரசு, தடை கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தலையிட உரிமை இல்லை!


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், கூறியிருப்பதாவது:இந்திய மக்களின் குடியுரிமையை பறிப்பது, இந்த சட்ட திருத்த மசோதாவின் நோக்கம் அல்ல.இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தில், தெளிவும், துல்லியமும் இல்லை. இதற்கு முன்பும், பல விவகாரங்களில், பாரபட்சத்துடன் கருத்து கூறியுள்ளது. எனவே, அரைகுறை அறிவுடன் கருத்து கூறியுள்ள ஆணையத்திற்கு, இந்த விவகாரத்தில் தலையிட உரிமை இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X