சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை; ரூ.10 கோடி அபராதம்

Added : டிச 11, 2019
Advertisement

சென்னை : கோவையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய நிறுவனத்திற்கு, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சங்கர சுப்பரமணியன் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வில், 2015ல் தாக்கல் செய்த மனு:கோவை மாவட்டம், வேடபட்டியில், 'கார்டன் சிட்டி' என்ற பெயரில், 1,220 வீடுகள் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பை, தனியார் நிறுவனம் கட்டியுள்ளது.

இந்த கட்டடம், 71 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. சுற்றுச்சூழல் அறிவிக்கையின்படி, 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேலான, கட்டுமான பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். இந்நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே, பணிகளை முடித்துள்ளதால், கட்டடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல், நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா தலைமையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை அறிக்கையில், 'இந்த கட்டடம், விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதால், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, இடைக்கால அபராதமாக, 10 கோடி ரூபாய் விதிக்கப்படுகிறது. இத்தொகையை, தனியார் நிறுவனம், ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை, ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் துறை ஆகியோர் அடங்கிய குழுவினர், கட்டடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின், அவை அளிக்கும் அறிக்கையில், அந்நிறுவனத்திடம் இருந்து, மொத்தமாக எவ்வளவு இழப்பீடு பெற வேண்டும் என்பதை, இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X